திருப்பரங்குன்றம்: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
வெற்றி மேல் வெற்றி தரும் திருப்பரங்குன்றம் முருகனை தரிசிக்க வந்தேன். திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பணிகளை தொடங்கி மாபெரும் வெற்றி பெறுவோம். அதிமுகவில் பிளவு ஏற்பட்டிருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியிருப்பது அவரது சொந்த கருத்து. அவர் காணும் பகல் கனவுகளுக்கு பதில் கூற முடியாது.
அதிமுக மிகப் பெரிய தர்மயுத்தத்தை நடத்தி ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து விடுதலை பெற்று, தொண்டர்களின் இயக்கமாக செயல்பட்டு வருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நல்ல திட்டங்களை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மீண்டும் அந்த குடும்பத்தின் ஆதிக்கத்துக்குள் அதிமுகவை கொண்டு வர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார், அது எக்காலத்திலும் நிறைவேறாது.
வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். அதுதான் வெற்றிக் கூட்டணியாக இருக்கும். கடந்த மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதாவின் நலத்திட்டங்கள் மூலம் மாபெரும் வெற்றி பெற்றோம். அதுபோல இனிவரும் தேர்தல்களிலும் மக்களின் ஆதரவோடு அமோக வெற்றி பெறுவோம். அதிமுகவை பொருத்தவரை ஜெயலலிதாவின் கொள்கைகளைத் நாங்கள் கடைப்பிடிக்கிறோம். எப்போதும் கடைப்பிடிப்போம் என்றார்.
அவருடன் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சரவணன், பெரியபுள்ளான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







