
கோவை: இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக, கோவையை சேர்ந்த மர ஆலை அதிபர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.
கோவையில் இந்து முன்னணி செய்தித் தொடர்பாளராக இருந்த சசிகுமார் (37), கடந்த 2016 செப்டம்பர் 22 -ஆம் தேதி கோவை கவுண்டர் மில்ஸ் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரைக் கைது செய்ததாக சிபிசிஐடி காவல் துறையினர் அறிவித்திருந்தாலும், கொலைக்கான காரணம், அதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பன உள்ளிட்ட சந்தேகங்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து சசிகுமார் கொலை வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) கடந்த ஜனவரி மாதம் மாற்றப்பட்டது. இதன் பிறகு என்ஐஏ அதிகாரிகள் கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் கிளை அலுவலகம் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், விசாரணைக்கு ஆதாரங்களைத் திரட்டும் வகையில் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரின் வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் மார்ச் 18 ஆம் தேதி சோதனை நடத்தினர்.
இந்த ஆய்வில் அபுதாஹீரின் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தையும், உக்கடத்தில் உள்ள சுபேரின் வீட்டில் இருந்து செல்லிடப்பேசியையும் பறிமுதல் செய்தனர். மேலும், 4 பேர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாக அதிகாரிகள் தகவல்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து கொலை வழக்கு தொடர்பாக ஆஜராக கூறி சாய்பாபா காலனியை சேர்ந்த மர ஆலை அதிபர் முகம்மது ரஃபிகுல் ஹசன் (30) என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு என்.ஐ.ஏ. சார்பில் அழைப்பாணை அளிக்கப்பட்டது. ஆனால், சசிகுமார் கொலைக்குப் பிறகு அவர் துபைக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. பலமுறை சம்மன் அனுப்பியும் முகம்மது ரஃபிகுல் ஹசன் ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது. துபைக்கு சென்ற அவர், தமது வீட்டை உறவினரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளதாகத் தெரிகிறது. அழைப்பாணையை ஏற்று முகம்மது ரஃபிகுல் ஹசன் ஆஜராகாததால் அவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமையின் கண்காணிப்பாளர் ராகுல் தலைமையில் அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர். இதில் செல்லிடப்பேசி, விடியோ ரிகார்டர், கடவுச் சீட்டு, சிம் கார்டு உள்ளிட்ட 23 வகையான பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





