மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பிளாஸ்டிக் தடை: மாற்றுப் பொருள்களுக்கு தட்டுப்பாடு

தமிழகத்தில் வருகிற ஜனவரி மாதம் முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை அமலாக்கப்பட உள்ள நிலையில், அதற்கான மாற்றுப்

News image
பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்டு தடையின்றி விற்பனை செய்யப்படும் பெரு நிறுவனங்களின் பிஸ்கட் பாக்கெட்டுகள்.
Updated On :25 டிசம்பர் 2018, 8:11 pm

இல. அன்பரசு


தமிழகத்தில் வருகிற ஜனவரி மாதம் முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை அமலாக்கப்பட உள்ள நிலையில், அதற்கான மாற்றுப் பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வியாபாரிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு பெரிதும் தீங்கிழைத்து வரும் நெகிழிப் ( பிளாஸ்டிக்) பொருள்களை தடுக்கும் விதத்தில், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாநில அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் கடந்த ஜூன் 25-ஆம் தேதி தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது. 6 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டு, ஜனவரி 1 முதல் இந்தத் தடை ஆணை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
தடை விதிக்கப்படும் பொருள்கள்: உணவகங்களில் தட்டுகளின் மேல் வைத்து பறிமாறப்படும் பிளாஸ்டிக் காகிதங்கள், உணவருந்தும் போது மேஜை மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் கலந்த காகிதங்கள், பிளாஸ்டிக் கலப்புடன் தயாரிக்கப்பட்ட குடிநீர்க் குவளைகள், தேநீர் குவளைகள், தெர்மோகோல் தட்டுகள், கப்புகள், பிளாஸ்டிக் கலப்புடன் தயாரிக்கப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், குடிநீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள், தடிமன் வித்தியாசமின்றி அனைத்து விதமான பிளாஸ்டிக் பைகள், நான்ஓவன் பைகள், பிளாஸ்டிக் கலப்புடன் நெய்யப்பட்ட பைகள், பிளாஸ்டிக் கொடிகள், பட்டர் காகிதங்கள் உள்ளிட்டவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளன.
மாற்றுப் பொருள்கள்: சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில், இதற்கு மாற்றாக வாழை இலை, பாக்கு மட்டை தட்டுகள், அலுமினிய காகிதங்கள், தாமரை இலைகள், கண்ணாடி, சில்வர் டம்ளர்கள், மூங்கில் உள்ளிட்ட மரங்களிலான பொருள்கள், துணிப் பைகள், காகிதங்கள், சணல் பைகள், பீங்கான் பொருள்கள், மண்பாண்டப் பொருள்கள், காகித உறிஞ்சு குழாய்கள், காகித சணல் பைகள், காகிதக் கொடிகள் போன்றவற்றைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இதற்காக 6 மாத அவகாசம் வழங்கி, ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பதற்கும், பயன்படுத்துவதற்கும் டிசம்பர் மாதம் வரை இறுதிக்கெடு வழங்கப்பட்டது. வருகிற ஜனவரி 1 முதல் தடை முழுமையாக அமலுக்கு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்திலும், அனைத்துத் துறை அதிகாரிகள் மூலம் வியாபாரிகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. உணவுப் பாதுகாப்புத் துறையினர், நகராட்சி ஆணையர்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர் ஆய்வு மேற்கொண்டு தடை உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும், பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.
பொதுமக்களிடையே இந்த உத்தரவு வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும், பிளாஸ்டிக்கை தவிர்த்து பொருள்களை வாங்கிச் செல்வதில் பொதுமக்கள் சுணக்கம் காட்டுவதாலும், மாற்றுப் பொருள்கள் கிடைக்காததாலும் வியாபாரிகள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.
பாரபட்சம் தவிர்க்க வேண்டும்: இதுகுறித்து வியாபாரிகள் சங்கத்தினர் கூறியதாவது:
தமிழக அரசின் பிளாஸ்டிக் தடை உத்தரவை வரவேற்கிறோம். 80 சதம் பிளாஸ்டிக் பயன்பாட்டில் உள்ள நிலையில், அதற்கு மாற்றுப் பொருள்கள் வருவதற்குள் தடையை அமல்படுத்துவது சிறு வியாபாரிகளைப் பாதிக்கிறது.
பெரிய நிறுவனங்களின் பிஸ்கெட் பாக்கெட்டுகள், பொரித்த உணவுகள், சாக்லெட்கள், ரொட்டிகள் உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்வதற்குத் தடைவிதிக்கவில்லை. உள்ளூர் வியாபாரிகள் அதே தடிமனில் பாலித்தீன் பைகளில் பொரித்த உணவுகள், ரொட்டிகளை அடைத்து விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மளிகைப் பொருள்கள் பாலித்தீன் பைகள், பால் பாக்கெட்டுகள், குளிர்பான பாட்டில்கள் ஆகியவை ஏற்கப்படுவதும், உள்ளூரில் பேக்கரி பொருள்களை பாலித்தீன் பைகளில் அடைத்து விற்பனை செய்வதற்குத் தடை விதிப்பதும் பாரபட்சமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
மத்திய அரசு மறுசுழற்சி செய்து பயன்படுத்தக்கூடிய அளவில், 51 மைக்ரான் அளவுக்கு மேலான பிளாஸ்டிக், பாலித்தீன் பொருள்களைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. ஆனால், தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளது.
ரயில் நிலையங்களில் உணவுப் பொருள்களை விற்பனை செய்ய பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்த கட்டுப்பாடில்லை.
மாற்றுப் பொருள்களுக்கு தட்டுப்பாடு: பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப் பொருளாக காகிதப் பொருள்கள், பாக்கு மர மட்டைகள், பீங்கான், அலுமினியப் பொருள்கள் சந்தையில் எளிதாகக் கிடைப்பதில்லை. சிவகாசியில் மட்டுமே தற்போது கிடைப்பதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அவை அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
இதனிடையே, பொதுமக்கள் 5 சதவீதம்கூட துணிப் பைகள், பாத்திரங்களை கடைகளுக்கு கொண்டு வருவதை பின்பற்றுவதில்லை. பாத்திரங்களை எடுத்துவரச் சொன்னாலும் வாடிக்கையாளர்கள் அதைக் கடைப்பிடிப்பதில்லை. இதனால், வியாபாரம் பாதிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மாற்றுப் பொருள்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் பதில் இல்லை. பிளாஸ்டிக் மாற்றுப் பொருள்களை உற்பத்தி செய்ய மானியம் வழங்கி விரிவுபடுத்தவும், அதற்கான அவகாசத்தையும் அரசு வழங்க வேண்டும்.
பிளக்ஸ் பேனர்கள், குடிநீர் பாட்டில்கள் போன்றவை மீது கட்டுப்பாடுகள் இல்லை. பாரபட்சமான நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்றும் வியாபாரிகள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதத்தில், மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்து, உரிய அவகாசம் வழங்கி, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசுக்குப் பரிந்துரைத்து குறைகள் தவிர்க்கப்படும். மாற்றுப் பொருள்கள் உற்பத்தியையும் அரசு ஊக்கப்படுத்தி வருகிறது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.