கஜா புயல் தாக்கி ஒரு மாதமாகியும் பொதுமக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பாதது கவலைக்குரியது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன்.
புதுகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்கும் முன் அவர் அளித்த பேட்டி:
1968 ஆம் ஆண்டு கீழவெண்மணி கிராமத்தில் கால்படி கூலியை உயர்த்திக் கேட்டதற்காக ஒடுக்கப்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர்கள் சிறுகுடிசையில் வைத்துக் கொளுத்தப்பட்ட தினம் (டிச. 25) இன்று. கூலித் தொழிலாளர்களின் நிலை இன்னமும் மாறவே இல்லை. மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி சட்டத்தின் கீழ் விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வேலை நாள்களையும், அவர்களுக்கு வழங்கப்படும் தினக்கூலியையும் அதிகரிக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கும் மேலாக புறம்போக்கு நிலத்தில் வசித்து வரும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்கும் அரசாணை வரவேற்கத்தக்கது.
கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்தும் மக்களின் இயல்பு நிலை திரும்பாதது கவலைக்குரியது. பேரிடர் பாதிப்பு இயற்கை. ஆனால் அதிலிருந்து மக்களை மீட்க வேண்டியது அரசின் பொறுப்பு; கடமை. அரசு வழங்கும் நிவாரணத் தொகை போதுமானதல்ல.
நிவாரணப் பொருள்களும் முழுமையாக விநியோகிக்கப்படவில்லை. முதல்வர் பிரதமரை நேரில் சந்தித்து ரூ. 15 ஆயிரம் கோடி நிதி கேட்டார். முதல் கட்டமாக ரூ. 1500 கோடி கேட்டார். எதுவும் வரவில்லை. மக்களைப் பற்றி கவலைப்படுகிறார்களா என்ற ஐயம் ஏற்படுகிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







