தேனி மாவட்டம், போடி அருகே வனப்பகுதியில் அரசு அனுமதியின்றி தனியாரால் முறைகேடாக அமைக்கப்படும் சாலைக்காக மலைப்பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்படுகின்றன.
இதுகுறித்து வனத்துறையினரும் கண்டுகொள்ளாததால் வன ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடி வடக்குமலை, மேற்குமலை உள்ளிட்ட பகுதிகளில் காபி, மிளகு, எலுமிச்சை, இலவு, சப்போட்டா, மா உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் வனப் பகுதியும் உள்ளது. வனப்பகுதியில் விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்யாமலும், வனத்தை காக்கவும் போடி வனத்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் போடி வடக்குமலை வருவாய் கிராமத்திற்கு உள்பட்ட பிச்சங்கரை வனப்பகுதியில் குறிப்பிட்ட தூரம் வரை தார்ச்சாலை அமைக்கப்பட்டு விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதனை அடுத்து வனத்துறைக்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட காடு அமைந்துள்ளது. இதனையடுத்து சில தனியார் தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களுக்கு செல்ல வனப்பகுதி வழியாக நடைபாதை மட்டுமே இருந்தது.
தற்போது இப்பகுதியில் வனத்துறை, வருவாய்த்துறை, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எவ்வித அனுமதியும் பெறாமல் வாகனங்கள் செல்லும் வகையில் மண் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பாறைகளை வெடி வைத்து உடைத்து வருகின்றனர்.
வனப்பகுதியில் சாலை அமைக்க பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் உள்ளன. மேலும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வன அலுவலர் அனுமதி பெறவேண்டும். வனப் பகுதியில் குறிப்பிட்ட தூரம் சாலை அமைக்க வேண்டுமானால் உச்ச நீதிமன்றத்திலும் அனுமதி பெற வேண்டும் என வனத்துறையில் விதிகள் உள்ளன. ஆனால் எந்தவித அனுமதியும் பெறாமல் இப்பகுதியில் தண்ணீர் வரத்து ஓடைகளை சேதப்படுத்தியும், திசை திருப்பியும், பாறைகளை வெடி வைத்து உடைத்தும் சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே பிச்சங்கரை பகுதி மது அருந்தும் பகுதியாக உள்ள நிலையில் தற்போது வாகனங்கள் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டால் இப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதி அழிக்கப்படுவதுடன், வன விலங்குகளும் பாதிக்கப்படும்.
இதுதொடர்பாக வன ஆர்வலர்கள் கூறியது:
போடியில் வனத்துறை செயல்படுகிறதா என்பதே சந்தேகமாக உள்ளது. கடந்த மார்ச் மாதம் 11 ஆம் தேதி குரங்கணி வனப்பகுதியில் சட்டவிரோதமாக மலையேற்ற பயிற்சிக்கு அனுமதியளித்ததால் 23 பேர் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தனர். கடந்த மாதம் 17 ஆம் தேதி இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 6 சுற்றுலாப் பயணிகள் வனத்துறையினருக்கு தெரியாமலேயே அனுமதியின்றி மலையேற்ற பயிற்சியாக கேரளத்திலிருந்து குரங்கணிக்கு வந்துள்ளனர். தற்போது பிச்சாங்கரை பகுதியில் அனுமதி பெறாமல் வெடி வைத்து பாறைகளை உடைத்துள்ளது வனத்துறையினர் இப்பகுதிக்கு வந்து பார்க்கவேயில்லை என்பதையே காட்டுகிறது. இச்சாலை அமைக்கும் பணியில் செல்வாக்கு பெற்றவர்கள் ஈடுபட்டுள்ளார்களா, அவர்களுக்கு வனத்துறையினர் உதவி வருகிறார்களா என்ற சந்தேகம் எழுவதுடன் வனத்துறை மீது அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது என்றனர்.
இதுகுறித்து போடி வனச்சரக அலுவலர் அன்புவிடம் கேட்டபோது, அவர் கூறியது:
பிச்சங்கரை பகுதியில் சாலை அமைக்கும் பணி நடப்பதாக தெரியவரவில்லை. புதிதாக சாலை அமைத்தாலோ அல்லது ஏற்கெனவே உள்ள சாலையை சீரமைத்தாலோ வனத்துறை அனுமதி பெறவேண்டும். மீறியவர்கள் மீது வனப்பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. பிச்சங்கரை வனப்பகுதியில் அனுமதி பெறாமல் சாலை அமைத்துள்ளது குறித்து விசாரணை செய்து மாவட்ட வன அலுவலருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். மாவட்ட வன அலுவலர் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தேனி மாவட்ட வன அலுவலர் கெளதமன் கூறியது:
வனப்பகுதியில் அனுமதியின்றி சாலை அமைக்கும் பணி குறித்து 3 நாள்களுக்கு முன்தான் தெரியவந்தது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்திரவிடப்பட்டுள்ளது என்றார்.
மாவட்ட வன அலுவலர் 3 நாள்களுக்கு முன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக கூறிய நிலையில், திங்கள்கிழமை இப்பகுதியில் புகைப்படம் எடுக்கச் சென்றபோது, தொடர்ந்து பாறைகளை உடைக்கும் பணி நடைபெற்றது. இது வனத்துறையினர் அலட்சியமாக செயல்படுவதையே காட்டுகிறது.
பாதைக்காக கற்களால் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

13/32: நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 13 அணிகள்!

அசாமில் இருந்து துபை, அபுதாபிக்கு நேரடி விமானம்! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

தவெக அரசுக்கு உதவவில்லை! உண்மை என்ன? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்

தங்கம் விலை அதிகரிப்பால் இரு மடங்கு உயர்வு... பிஃபா உலகக் கோப்பையின் விலை இவ்வளவா?
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


