மாநகரப் பேருந்துகளில் மீண்டும் பஸ் பாஸ்கள் வழங்கப்படுமா?: இன்று முடிவு வெளியாக வாய்ப்பு

அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துக் கட்டண உயர்வுக்குப் பிறகு, சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 3 வகை பயண அட்டைகளை (பாஸ்) மீண்டும் தொடர்ந்து வழங்குவது
Updated on
1 min read

அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துக் கட்டண உயர்வுக்குப் பிறகு, சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 3 வகை பயண அட்டைகளை (பாஸ்) மீண்டும் தொடர்ந்து வழங்குவது குறித்த அறிவிப்பு செவ்வாய்க்கிழமை (பிப்.5) வெளியாகும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மாநகரில் நாள்தோறும் 3,000-க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புறநகர் பகுதிகளில் குடியிருப்பு, தொழிற்சாலைகள் அதிகரித்து வருவதால், பணிக்கு செல்வோரின் வசதிக்காக ரூ.50 (ஒரு நாள்), ரூ.300 (ஒரு வாரம்), ரூ.1,000 (ஒரு மாதம்) என 3 வகையான பேருந்து பயண அட்டை (பஸ் பாஸ்) மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் வழங்கப்பட்டு வருகிறது.
ஒரே நாளில் 3 அல்லது 4 பேருந்துகளில் மாறிச் செல்வோர், நீண்ட தூரம் பயணம் செய்வோருக்கு வசதியாக இந்த பஸ் பாஸ்கள் அளிக்கப்படுகின்றன. இந்த பஸ் பாஸ்களை நாள்தோறும் 2 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். குளிர்சாதன வசதியுள்ள மாநகர பேருந்துகளில் மட்டும் இந்த பயண அட்டை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த மாதம் அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து, 3 வகையான பஸ் பாஸுக்கான கட்டணத்தை உயர்த்துவதா அல்லது அதே கட்டணத்தில் தொடர்ந்து வழங்குவதா என்பது குறித்து மாநகர போக்குவரத்து கழகம் இன்னமும் முடிவை அறிவிக்காமல் உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் முடிவு செய்து ஒரு சில பரிந்துரைகளை அரசுக்கும், அமைச்சரிடமும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் பொது மக்களின் விரக்தி, எதிர்ப்பு காரணமாக, இந்த வகை பேருந்து பயண அட்டைகளை தற்போது வழங்கப்பட்டு வரும் கட்டணத்திலேயே தொடர்ந்து வழங்க அமைச்சர் அதிகாரிகளிடம் ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக புதிய பஸ் பாஸ்களும் வழங்கப்படாமல் உள்ளன. அதிக அளவில் மக்கள் பயன்படுத்தும் ஒரு நாள் பஸ் பாஸும் வழங்கப்படாததால் லட்சக்கணக்கானோர் ஒரு நாள் பேருந்துப் பயணத்துக்கு அதிகத் தொகை செலவிட்டு வரும் நிலை நீடித்து வருகிறது.
இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியது: மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் 3 வகையான பேருந்து பயண அட்டை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியாக வாய்ப்புள்ளது. ஒவ்வொரு மாதமும் பயண அட்டை வாங்கும் பயணிகளுக்கு 7 -ஆம் தேதிக்குள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பொதுமக்கள் பலர் பயண அட்டை வழங்கும் மையங்களுக்குச் சென்று பயண அட்டைகளை வழங்க தொடர்ந்து கோரி வருகின்றனர் என்றனர் அவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com