மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

வாடகை டெண்டரை மண்டல அளவில் நடத்த மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் முன்வராததால், தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை

News image
நாமக்கல்லில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டேங்கர் லாரிகள். 
Updated On :12 பிப்ரவரி 2018, 11:36 pm

DIN

வாடகை டெண்டரை மண்டல அளவில் நடத்த மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் முன்வராததால், தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை (பிப்.12) தொடங்கினர். 
வேலைநிறுத்தப் போராட்டத்தால் தென் மாநிலங்களில் உடனடியாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என சமையல் எரிவாயு விநியோக முகவர்கள் தெரிவித்தனர். 
தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி, ஆந்திரம், தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லில் உள்ளது. இதன் உறுப்பினர்களுக்குச் சொந்தமான சுமார் 4,500 டேங்கர் லாரிகள் இந்தியா முழுவதும் இயங்கி வருகின்றன. 
இவை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயுவை மொத்தமாக டேங்கர்களில் எடுத்துச் சென்று, நாடு முழுவதும் உள்ள எரிவாயு சிலிண்டர்கள் நிரப்பும் பாட்டிலிங் மையங்களுக்கு கொண்டு சேர்க்கின்றன. 
இந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் 2018-2023 ஆம் ஆண்டுக்கான லாரி வாடகை டெண்டரை கடந்த மாதம் அறிவித்தன. இதில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள மண்டல அளவிலான டெண்டர் முறை ரத்து செய்யப்பட்டு, மாநில அளவில் டெண்டர் நடைமுறைபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த புதிய டெண்டர் நடைமுறையில், ஒரு வாகனம் எந்த மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அந்த மாநிலத்தில் நடைபெறும் டெண்டரில் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஏற்கெனவே இருந்த டெண்டரில் தென் மண்டலத்தில் உள்ள 6 மாநிலங்களுக்கும் ஒரே டெண்டர் அறிவிக்கப்பட்டு, வாடகை இறுதி செய்யப்படும். இந்த அறிவிப்பால் ஒவ்வொரு மாநிலத்திலும் டெண்டர் நடத்தப்படுகிறது. இதனால் பிற மாநில பதிவெண் கொண்ட லாரிகள், மற்ற மாநிலங்களில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தென் மண்டலத்தில் இப்போது மொத்தம் உள்ள 7,500 லாரிகளில் 3,000-க்கும் மேற்பட்ட லாரிகள் வேலை இழக்கும் நிலை ஏற்படும். இதனால் மண்டல அளவிலான டெண்டரையே மீண்டும் நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 
ஆனால் மத்திய அரசோ, எண்ணெய் நிறுவனங்களோ இந்த கோரிக்கையை ஏற்க முன்வராத நிலையில், திங்கள்கிழமை முதல் காலவரையற்ற போராட்டத்தை லாரி உரிமையாளர்கள் தொடங்கியுள்ளனர். இதனால் தென் மண்டலத்தில் இப்போது ஓடிக் கொண்டிருக்கும் 4,200 டேங்கர் லாரிகள் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 
போராட்டம் தொடரும்: இதுகுறித்து தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கச் செயலர் கார்த்திக் கூறியது: மத்திய அரசு தரப்பிலோ, எண்ணெய் நிறுவனங்கள் தரப்பிலோ இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு இல்லை. எங்களின் பிரதான கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் நடைமுறையில் உள்ள மண்டல அளவிலான டெண்டர் தொடர வேண்டும் என்பது தான். எண்ணெய் நிறுவனங்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்கும் வரை போராட்டம் தொடரும்.
தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த மண்டலத்தில் மேற்கு வங்கம், பிகார், ஒரிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் உள்ளன என்றார். 
10 நாள்கள் வரை நிலைமை மாறாது: வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியது: மாநில அளவில் வாடகை டெண்டர் என்பது, மத்திய அரசின் கொள்கை முடிவு, அதன்படியே எண்ணெய் நிறுவனங்கள் புதிய டெண்டரை அறிவித்துள்ளன. தென் மண்டலத்தில் மொத்தம் 47 பாட்டிலிங் மையங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான பாட்டிலிங் மையங்களில் இன்னும் 5 முதல் 7 நாட்கள் வரை எரிவாயு இருப்பு உள்ளது. 
இங்கு சிலிண்டர்களில எரிவாயு நிரப்பும் பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் வேலைநிறுத்தம் நீடித்தாலும், இன்னும் ஒரு 10 நாட்கள் வரை சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. மேலும், தமிழகத்தில் கோவைப் பகுதிக்கு பெரும்பாலும் சரக்கு ரயில் வேகன்கள் மூலமே எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. 
இதனால் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் வேலைநிறுத்தம் ஒரு மாத காலம் நீடித்தாலும், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றனர்.


எரிவாயு விநியோகம் உடனடியாக பாதிக்காது

தமிழ்நாடு, புதுச்சேரி மாநில பாரத் பெட்ரோலியம் சமையல் எரிவாயு விநியோகிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.பாலசுப்ரமணியன் கூறியது: 
சமையல் எரிவாயு முகமைகளில் 2 நாள்களுக்கு தேவையான எரிவாயு உருளைகள் இருப்பு உள்ளன. சமையல் எரிவாயு உருளைகள் லோடு வருவதிலும் தடையில்லை. 
மேலும், சராசரியாக 25,000 இணைப்பு உள்ள முகமைக்கு தினமும் 1,000 முதல் 2,000 எரிவாயு உருளைகள் மட்டுமே தேவை இருக்கும். அதே சமயத்தில் வேலைநிறுத்தம் தொடந்து 5 நாள்களுக்கு மேல் நீடித்தால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.