சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் உள்ள இரண்டாம் நிலை திரையரங்குகளில் சில நாட்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கி விட்டது. அந்த திரையரங்குகளில் பெரும்பாலான இருக்கைகள் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே முன்பதிவு செய்யப்பட்டன. ஆனால், வணிக வளாங்களில் உள்ள முதல் நிலை திரையரங்குகள் உள்ளிட்ட பெரும்பாலான திரையரங்குகளில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கும், இன்று காலையும் முன்பதிவு தொடங்கின. இவற்றில் முன்பதிவு தொடங்கும் போதே 95% இருக்கைகள் நிரம்பியிருந்தன. அவற்றுக்கான நுழைவுச்சீட்டுகள் தான் சட்டவிரோதமாக சில முகவர்களுக்கு வழங்கப்பட்டு, கள்ள சந்தையில் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 5% முன்வரிசை இருக்கைகள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்கப்படுகின்றன. இதை வர்ணிக்க பகல்கொள்ளை என்பதைத் தவிர வேறு வார்த்தைகள் இல்லை.