4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கோவையில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம்: இந்து இயக்கப் பிரமுகர்கள் 49 பேருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

கோவையில் இந்து இயக்கப் பிரமுகர்களை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த இந்து இயக்கப்

Updated On :3 செப்டம்பர் 2018, 9:13 pm


கோவையில் இந்து இயக்கப் பிரமுகர்களை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த இந்து இயக்கப் பிரமுகர்கள் 49 பேருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 
இந்து இயக்கங்களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களைக் கொலை செய்ய இளைஞர்கள்சிலர் திட்டமிட்டிருப்பதாக மத்தியப் புலனாய்வுப் பிரிவு (ஐபி) அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த இளைஞர்கள் தன்பாத்தில் இருந்து ஆலப்புழை செல்லும் விரைவு ரயிலில் செப்டம்பர் 1ஆம் தேதி வருவதாகத் தெரிய வந்தது. இதையடுத்து, மத்தியப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அவர்களைப் பின்தொடர்ந்து அதே ரயிலில் பயணம் செய்துள்ளனர். மேலும், கோவை மாநகரக் காவல் துறையினரிடமும் உதவி கோரியுள்ளனர். 
இதையடுத்து, மாநகரக் காவல் துறையினர் சாதாரண உடைகளில் வடகோவை, கோவை ரயில் நிலையங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து, கோவை வந்த தன்பாத் விரைவு ரயிலில் பயணம் செய்த 4 பேரையும் மாநகரக் காவல் துறையினரின் உதவியுடன், மத்தியப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பிடித்துச் சென்றனர். 
அவர்களை அழைத்துச் செல்வதற்காக வந்த கோவை, என்.எச்.சாலையைச் சேர்ந்த ஆர்.ஆஷிக் (25) என்பவரையும் விசாரணைக்காக பீளமேடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்த எஸ்.இஸ்மாயில் (25), சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த இ.ஜாபர் சாதிக் அலி (29), பல்லாவரத்தைச் சேர்ந்த எஸ்.சம்சுதீன் (20), ஓட்டேரியைச் சேர்ந்த எஸ். சலாவுதீன் (25) என்பது தெரியவந்தது. இவர்கள் நான்கு பேரும் கோவையில் உள்ள இந்து இயக்கங்களின் பிரமுகர்களைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாகத் தெரியவந்தது. 
ஒப்புதல் வாக்குமூலம்: 
அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில், திண்டிவனத்தைச் சேர்ந்த எஸ்.இஸ்மாயில் ஐ.எஸ். அமைப்பின் ரகசிய உறுப்பினர் என்றும், வாகனத்தில் ஐ.எஸ். ஸ்டிக்கரை ஒட்டியுள்ளதும், அதை கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) மூலமாக நண்பர்களுக்கு அனுப்பி இருப்பதும் தெரியவந்தது.
மேலும், முகநூல் மூலமாக ஆஷிக் சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு அறிமுகமானார் என்றும், அதே வேளையில் ஒருமித்த கருத்துகளின் அடிப்படையில் பழக்கம் ஏற்பட்டு தங்களது மதத்துக்கு எதிராகப் பேசுபவர்களையும், சமூக வலைதளங்களில் எதிரான கருத்துகளைப் பரப்புபவர்களையும் கண்காணித்து வந்ததாகவும் வாக்குமூலம் அளித்திருந்தார். இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த வெரைட்டிஹால் சாலை காவல் துறையினர் சட்ட விரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டம் (உபா), கூட்டுச் சதி உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். 
இந்த வழக்கில் தொடர்புடைய கோவையைச் சேர்ந்த மேலும் இருவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். 
இந்து இயக்கப் பிரமுகர்கள் 49 பேருக்கு கூடுதல் பாதுகாப்பு
இச்சம்பவத்தையடுத்து, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள இந்து இயக்கங்களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கைது சம்பவத்தின் எதிரொலியாக இரு மாவட்டங்களிலும் 49 பேருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு சில பிரமுகர்களின் வீடுகளுக்குத் துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.