திண்டிவனம்-நகரி புதிய ரயில்வே திட்டப் பணி: பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு இல்லாததால் ஏமாற்றம்

வட தமிழக மக்களின் 14 ஆண்டுக்கால கனவான திண்டிவனம்-நகரி புதிய ரயில்வே திட்டப்பணிகள் விரைந்து நிறைவேற்றப்படுமா என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில்,
திண்டிவனம்-நகரி புதிய ரயில்வே திட்டப் பணி: பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு இல்லாததால் ஏமாற்றம்

வட தமிழக மக்களின் 14 ஆண்டுக்கால கனவான திண்டிவனம்-நகரி புதிய ரயில்வே திட்டப்பணிகள் விரைந்து நிறைவேற்றப்படுமா என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் அதற்கான நிதி ஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகாததால் வேலூர் உள்பட 4 மாவட்ட மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் போக்குவரத்து, தொழில், சுற்றுலா வளர்ச்சி பெறவும், ரயில் போக்குவரத்து வசதி இல்லாத ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி ஆகிய பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் நோக்கிலும் கடந்த 2004-ஆம் ஆண்டு திண்டிவனம்-நகரி இடையே 184 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த 2006-07-ஆம் ஆண்டு மத்திய ரயில்வே பட்ஜெட்டில் ரூ. 582.83 கோடி மதிப்பீட்டில் திண்டிவனம்-நகரி புதிய ரயில் பாதைத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த ரயில் வழித்தடம் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைக் கடந்து, ஆந்திர மாநிலம், சித்தூர் வழியாக நகரியைச் சென்றடையும். 
இதன் மூலம் திண்டிவனம், வெள்ளிமேடுபேட்டை, தெள்ளாறு, வந்தவாசி, மாம்பாக்கம், எருமைவெட்டி, செய்யாறு, இருங்கூர், மாமண்டூர், ஆரணி, தாமரைப்பாக்கம், திமிரி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா ரோடு சந்திப்பு, கொடைக்கல், சோளிங்கர், ஆர்.கே.பேட்டை, அத்திமாஞ்சேரிப்பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, நகரி ஆகிய பகுதிகளில் 3 பழைய ரயில் நிலையங்கள் மற்றும் 18 புதிய ரயில் நிலையங்கள் என மொத்தம் 21 ரயில் நிலையங்கள் இடம் பெறுகின்றன.
இவ்வழித் தடத்தில் 12 பெரிய பாலங்கள், 114 சிறிய பாலங்கள், 66 கடவுப் பாதைகள், 11 மேம்பாலங்கள், 30 தரைவழிப் பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டப் பணிகள் முழுமை அடையாததற்கு நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள், போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, திண்டிவனம்-நகரி புதிய ரயில் பாதைப் பணிகள் 2020-இல் நிறைவடையும் என்றும் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்புப் பலகை ஒன்று கடந்த ஆண்டு வைக்கப்பட்டது.
அதில், இவ்வழியாக 5 புதிய ரயில்களும், தென்னகம் செல்லும் சரக்கு ரயில்கள், சென்னை ரயில் நிலையத்தைக் கடக்காமல் செல்லும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 
மேலும், புதுச்சேரி, பிற பகுதிகளுக்கு கூடுதலாக 2 அல்லது 3 ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால், திண்டிவனம் - நகரி வழித்தடத்தில் உள்ள பகுதி மக்கள் ஆறுதலும், மகிழ்ச்சியும் அடைந்திருந்தனர்.
இந்நிலையில், பிப்ரவரி 2-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2018-19-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் ரயில்வே துறைக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ. 1.48 லட்சம் கோடி ஒதுக்கீப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட 13 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டது. 
ஆனால், வட தமிழக மக்களின் 14 ஆண்டு கால கனவான திண்டிவனம் -நகரி புதிய ரயில்வே திட்டம் நிறைவேறுமா என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டிலும் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாதது 4 மாவட்ட மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
எனவே, மத்திய அரசுக்கு, மாநில அரசு அழுத்தம் கொடுத்து திண்டிவனம்-நகரி புதிய ரயில்வே திட்டத்தை விரைந்து நிறைவேற்ற தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com