/

நிதி ஒதுக்கீட்டுக்காக காத்திருக்கும் சென்னை- கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை ரயில் பாதைத் திட்டம்

சென்னை - கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரை ரயில் பாதைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:39 am

அ. ரவி

திருத்துறைப்பூண்டி: சென்னை - கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரை ரயில் பாதைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் போதிய ரயில் சேவை இன்றி அவதிப்படும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள். தற்போது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை மார்க்கமாக செல்லும் ரயில்களிலும் மற்றும் விழுப்புரம் கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை வழியாக ராமேசுவரம் செல்லும் ரயில்களிலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகையின்போது முன்பதிவு 3 நிமிடங்களிலேயே முடிந்துவிடுகிறது.

தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது இப்பகுதி மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று திரும்ப பெரிதும் சிரமப்பட வேண்டியுள்ளது. சாதாரண ரயில் கட்டணத்தை விட 2, 3 மடங்கு கட்டணம் கூடுதலாக செலுத்தி பிரிமியம் ரயில்களிலும், ஆம்னி பேருந்துகளிலும் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். மேலும் குடும்பத்தினருடன் கூடுதல் கட்டணம் செலுத்தி சொந்த ஊர்களில் சொந்த பந்தங்களுடன் பண்டிகையை கொண்டாட முடியாமல் அவதிப்படும் வேதனை தொடர்கிறது.

இந்நிலை மாற, சென்னையில் இருந்து மாமல்லபுரம், கூவத்தூர், மரக்காணம், புதுச்சேரி, கடலூர்,  சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை , அறந்தாங்கி, காரைக்குடி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், கூடங்குளம் வழியாக கன்னியாகுமரிக்கு கிழக்கு கடற்கரை வழியாக ரயில் சேவை தொடங்க வேண்டும் என்பது ரயில் பயணிகளின் நீண்ட கால கோரிக்கையாகவும் மக்களவைத் தேர்தல் கால வாக்குறுதியாகவே உள்ளது. இத்திட்டம் குறித்து தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த அப்போதைய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கெளடா பரிசீலனைக்கு ஏற்று விரைவில் திட்ட ஆய்வு கருத்துக் கூறப்படும் என தெரிவித்தார்.

ஆனால் இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் எவ்வித முன்னேற்றமும் இதுவரை இல்லை. சென்னையிலிருந்து மாமல்லபுரம் புதுச்சேரி வழியாக கடலூர் துறைமுகம் வரை 178 கி.மீ தொலைவுக்கு இருப்புப் பாதை அமைக்க 2008 - 2009-ஆம் ஆண்டு ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டும் இதுவரை ஆய்வு நிலையிலேயே உள்ளது. கடலூரில் இருந்து மயிலாடுதுறை, பேரளம் வரை தற்போது ரயில் சேவை நடைபெற்று வருகிறது. பேரளத்தில் இருந்து காரைக்கால் வரை 24 கி.மீ தூரத்துக்கு ரயில்வே பாதையை மீண்டும் தொடங்குவதில் ரயில்வே துறைக்கு எவ்வித சிரமமும் இல்லை. பேரளத்திலும் காரைக்காலிலும் ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.

பழைய ரயில்பாதை இருந்த இடம் ரயில்வே துறையிடமே உள்ள நிலையில் நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. தண்டவாளங்களும் சிக்னல்களும் அமைத்தாலே புதிய வழித்தடம் தயாராகி விடும். அப்பணியைத் தொடங்குவதிலும் ரயில்வே துறை தேவையற்ற சுணக்கம் காட்டி வருகிறது. காரைக்காலில் இருந்து வேளாங்கண்ணி வரை தற்போது அகல ரயில் பாதை பணி நடைபெற்று வருகிறது. வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரையிலும் திருத்துறைப்பூண்டியிலிருந்து காரைக்குடிக்கு 121 கி.மீ. தொலைவுக்கு அகலப்பாதை பணிகள் முடிந்த நிலையில் கேட் கீப்பர்கள் நியமிக்கப்படாத நிலையில் ரயில் சேவை முழுவதுமாக தொடங்காமல் உள்ளது.

காரைக்குடி தொடங்கி ராமநாதபுரம், கீழக்கரை, சாயல்குடி, தூத்துக்குடி, காயல்பட்டினம், ஆறுமுகநேரி, கூடங்குளம் வழியாக கன்னியாகுமரி வரை 463 கி.மீ தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்க  ரூ. 1,965 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டும், 34 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டும், பணிகள் தொடங்காமல் ஆய்வு நிலையிலேயே உள்ளன. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் கன்னியாகுமரி சென்னை பாதையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும் புதுவை மாநில மக்களும் பயனடைவார்கள்.

மேலும், சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடற்கரை சாலை நான்கு வழிப்பாதையாக ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பில் அகலப்படுத்தப்படும் நிலையில், இந்த ரயில்வே திட்டம் செயல்படுத்தப்பட்டால் இப்பகுதி மேலும் வளர்ச்சி அடைந்து பெரும் பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும்.
காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களுக்கு நேரடியாக சரக்குகளை அனுப்பவும் கூடங்குளம் அணுமின் திட்டம் மற்றும் சுற்றுலா ஆன்மிகத் தளங்களை இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழித்தடத்தை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை ஆய்வு முடிந்த திட்டங்களுக்கு மத்திய அரசு சிறப்புக் கவனம் செலுத்தி இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்பதே கிழக்கு கடற்கரை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும். 

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.