ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான மனிதச் சங்கிலிப் போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு 

காவிரி டெல்டா பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நடைபெறும் மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு.. 
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான மனிதச் சங்கிலிப் போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு 

சென்னை: காவிரி டெல்டா பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நடைபெறும் மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு தருவதுடன் அதில் கலந்து கொள்வதாகவும் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கி, தமிழக விவசாயிகளின் வாழ்வதாரத்தை அடியோடு அழிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு உள்ளிட்ட பல்வேறு பேரழிவுத் திட்டங்களை மத்திய பாஜக அரசும், மாநில அதிமுக அரசும் திட்டமிட்டு செயல்படுத்த முனைந்து வருகின்றன. இத்திட்டங்களால் தமிழக விவசாயமும், விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு, காவிரி பாசன மண்டலம் நாசமாகும் ஆபத்து உள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. தற்போது ஜூன் 5ந் தேதி முதல் ஜுன் 10ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் இருசக்கர வாகன பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், நம்மாழ்வாரால் தொடங்கப்பட்ட “பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம்” சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து 2019 ஜூன் 12ந் தேதி மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை விழுப்புரம் மாவட்டத்திலிருந்து புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கேட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரையிலான 596 கிலோ மீட்டர் தூரம் “மனிதச் சங்கிலிப் போராட்டத்தை” நடத்தவுள்ளனர். இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவினையும் கேட்டுள்ளது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், விளை நிலங்களை காப்பாற்றவும் நடைபெறும்  இந்த மனித சங்கிலிப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது.

மேற்கண்ட மாவட்டங்களில் நடைபெறும் இந்த மனிதசங்கிலிப் போராட்டத்தில் கட்சி அணிகள் முழுமையாக கலந்து கொண்டு கண்டனக் குரலெழுப்பிட வேண்டுமெனவும் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com