கூடங்குளம் அணு உலை இயங்குவதற்கு 15 நிபந்தனைகளை விதித்தே உச்ச நீதிமன்றம் இயங்க அனுமதித்தது. அவற்றுள் முதன்மையானது, தற்காலிக அணுக்கழிவு மையத்தை (AFR) ஐந்தாண்டுகளுக்குள் அமைத்து முடிக்க வேண்டும் என்பதாகும். அக்காலக்கெடு 2018, மார்ச் மாதத்தோடு முடிவடைந்த நிலையிலும், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் வரை மேலும் ஐந்தாண்டுகள் கால அவகாசம் கேட்டிருக்கிறது இந்திய அணுசக்தித்துறை. கூடங்குளத்தில் அமைக்கப்பட்டிருப்பது மென் நீர் உலை என்பதால் ஏகப்பட்ட சிக்கல்களையும், இடர்பாடுகளையும் சந்தித்து வருவதாகக் கூறி, தற்காலிக அணுக்கழிவு மையத்தை அமைப்பதற்கே திக்கித் திணறி வருவதை இந்திய அணுசக்தித் துறையே ஒத்துக்கொண்டிருக்கிறது. மேலும் கூடங்குளம் அணு உலை தொடர்பாக நாளிதழ்களில் அவ்வப்போது வெளியாகும் செய்திகள் அணு உலை அமைக்க பட்ட விதத்திலேயே இருக்கின்ற சிக்கல்களை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. இத்தகைய அசாதாரண நிலையில் உருவாக்கப்படும் அணுக்கழிவு மையம் எந்த நிலையிலும் பாதுகாப்பானதாக இருக்க முடியாது. இந்த மண்ணில் வாழக்கூடிய மண்ணின் மக்களை சோதனைக்கூட எலிகளாக கருதி இது போன்ற பேரழிவு திட்டங்கள் இந்த மண்ணில் நடைமுறைப்படுத்தப்படுவது இம்மண்ணில் வாழக்கூடிய ஒவ்வொரு தமிழனின் உயிர் பாதுகாப்புக்கு எதிரானது மட்டுமல்ல சுற்றுப்புற சூழல் பெருந்தீங்கினை ஏற்படுத்துவது ஆகும்.