
கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் சோதனை நடத்தி வந்த வருமான வரித்துறையினர், யாரும் கண்டறிய முடியாத வகையில் அமைக்கப்பட்டிருந்த ரகசிய அறையைக் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த ரகசிய அறையில் இருந்து கட்டுக்கட்டாக ரூ.500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வீட்டில் ஒரு பக்கம் சிறிய ஏணிப்படிகள் போன்ற அமைப்பு இருந்ததும், சுவரைத் தட்டிப் பார்க்கும் போது இது சுவர் அல்ல என்றும் அதன் பின் அறை இருப்பதும் தெரிய வந்தது.
ரகசிய அறைக்குள் நுழைந்த வருமான வரித்துறையினர், அங்கு கட்டுக்கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ந்து போயினர். அங்கு மொத்தம் 500, 200 ரூபாய் கட்டுகள் என ரூ.8.25 கோடி பணம் இருந்தது. இதில், 5 கோடி பணத்துக்கு ஆவணங்கள் எதுவும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமாக, கோவையில் உள்ள 22 இடங்களில் வருமான வரித் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர்.
மக்களவைத் தேர்தலையொட்டி, நாடு முழுவதும் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக பல்வேறு இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் மார்ட்டின். இவர் நாடு முழுவதும் லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், மார்ட்டினுக்கு சொந்தமாக நாடு முழுவதும் உள்ள 70 இடங்களில் வருமான வரித் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். கோவையில் 22 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களிலும், கொல்கத்தாவில் 18 இடங்களிலும் மற்றும் மும்பை, சிலிகுரி, குவாஹாட்டி, ஹைதராபாத், ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
கோவையில் வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள அவரது இல்லத்திலும், அதன் அருகிலேயே உள்ள அவருக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றிலும் போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர். இதேபோல மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அவருக்குச் சொந்தமான ஹோமியோபதி கல்லூரி, ரத்தினபுரி, கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள வீடுகளிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். திமுக முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதியின் கதை, வசனத்தில் வெளிவந்த இளைஞன் என்ற திரைப்படத்தை தயாரித்தவர் மார்ட்டின். அப்போதைய சூழலில் இவர் திமுக ஆதரவாளர் எனக் கருதப்பட்டார். இதேபோல, மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டின், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சியில் மாநில துணைப் பொதுச்செயலராகப் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகள் இடைத்தேர்தல் நெருங்கும் நேரத்தில் மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.