/

கோவையில் பாஜக பிரமுகர் கொலை: தப்பியோடிய 5 பேரைத் தேடும் போலீஸார்

கோவையில் பாஜக பிரமுகர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On :27 மே 2019, 2:55 am IST

கோவையில் பாஜக பிரமுகர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவை, ஆர்.எஸ்.புரம், குமாரசாமி காலனியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (26). இந்திய தேசிய குடியுரிமைக் கட்சியின் மாநிலச் செயலராகப் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அவர் பாஜகவில் இணைந்துள்ளார். இதனை அவரது சித்தப்பா விஜி, சித்தி மது ஆகியோர் கண்டித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே, கடந்த சில மாதங்களாகப் பிரச்னை இருந்துவந்துள்ளது. இந்நிலையில், விஜி, மது மற்றும் இந்திய தேசியக் குடியுரிமைக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆறுமுகம், குண்டு ரமேஷ், செந்தில், கருண் ஆகியோர் சந்தோஷ் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று அவரை மீண்டும் கட்சியில் இணையுமாறு மிரட்டியுள்ளனர்.
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் வீட்டை விட்டுச் சென்ற பிறகு, இந்தச் சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்குமாறு அவரது சகோதரி பவானியிடம் சந்தோஷ் கூறியுள்ளார். வீட்டில் இருந்தால் மீண்டும் பிரச்னை ஏற்படும். எனவே, உறவினர் வீட்டில் தங்கியிருக்குமாறு சந்தோஷிடம் பவானி கூறியுள்ளார். இதையடுத்து, வீரகேரளத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சந்தோஷ் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அப்போது, அவரைப் பின் தொடர்ந்து சென்ற இந்திய தேசியக் குடியுரிமைக் கட்சி நிர்வாகிகள் கருண் மற்றும் சிலர் வீரகேரளத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகம் அருகே  சந்தோஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.  வாக்குவாதம் முற்றியதால் 5 பேரும்  கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சந்தோஷை தாக்க முயன்றுள்ளனர். அப்போது, அவர்களிடம் இருந்து சந்தோஷ் தப்பி ஓடியுள்ளார். இவரை விரட்டிச்சென்ற  அந்தக் கும்பல் , நாகராஜபுரம் பேருந்து நிலையம் அருகே  வைத்து சந்தோஷை தாக்கியுள்ளனர். இதில் அவரது கழுத்தில் வெட்டுக் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பவானி அளித்த புகாரின் பேரில் பேரூர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பியோடிய கும்பலைச் சேர்ந்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.