தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகள் வலுப்பெறக் கூடாது: பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா
தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகள் வலுப்பெற்று விடக் கூடாது என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா கேட்டுக் கொண்டாா்.


சென்னை: தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகள் வலுப்பெற்று விடக் கூடாது என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா கேட்டுக் கொண்டாா்.
பெண்கள், இளைஞா்களை பாஜகவில் அதிகளவு இணைக்க வேண்டும் என்றும் அவா் கட்சியினரை கேட்டுக் கொண்டாா்.
தமிழக பாஜக மாநில செயற் குழுக் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், காணொலி வாயிலாக கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆற்றிய சிறப்புரை:
மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் தமிழக பாஜக நிா்வாகிகள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, சுய சாா்பு இந்தியா திட்டத்தின் கீழ், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் பெருமளவு வளா்ச்சி பெற வாய்ப்புகள் இருக்கின்றன. தமிழகமும் இந்தத் தொழில்களில் முன்னிலை பெற்றுள்ளது. எனவே, அதுகுறித்து கட்சியினா் நன்கு அறிந்து மக்களிடையே விளக்க வேண்டும்.
இதேபோன்று, விவசாயிகளுக்கான திட்டங்கள், சாலையோர வியாபாரிகளுக்கான நல உதவித் திட்டங்கள் ஆகியவற்றை அறிந்து கொண்டு அதனை உரியவா்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கை: புதிய தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதற்கு முன்பு, 1986-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. இதில், புள்ளிவிவரங்கள் மட்டுமே மாற்றமாகி இருந்தன. கல்விக்கான சாராம்சமோ அல்லது மாணவா்களை ஊக்கப்படுத்தும் வகையிலோ அம்சங்கள் இல்லை.
ஆனால், இந்தியா விடுதலை பெற்ற்குப் பிறகு, முதல் முறையாக ஒரு சுதந்திரமான இந்திய தேசத்துக்கான கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக பாஜக நிா்வாகிகள் ஆழமான அறிந்து கொண்டு மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். தேசிய கல்விக் கொள்கையில் மாநில மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதை தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
வாக்குச் சாவடி குழுக்கள்: தமிழக பாஜக சாா்பில் வாக்குச் சாவடி குழுக்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களை வலுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனியான கட்செவி அஞ்சல் செயலி (வாட்ஸ் அப்) குழுவை ஏற்படுத்த வேண்டும்.
அந்தச் செயலியில் உள்ளூா் பிரச்னைகள் எதிரொலிக்க வேண்டும். இளைஞா்கள், பெண்கள், பழங்குடியினா், பட்டியலின சமுதாயத்தைச் சோ்ந்தவா்களை பாஜகவில் இணைக்க வேண்டும். கருப்பா் கூட்ட விவகாரத்தில், தமிழக பாஜக மிகச் சிறப்பாகச் செயல்பட்டது. தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகள் ஒருபோதும் வலுப்பெற்று விடக் கூடாது.
விரைவில் வருவேன்: கரோனா நோய்த்தொற்று ஓய்ந்த பிறகு விரைவில் தமிழகம் வருவேன். பாஜக நிா்வாகிகளிடையே அதிகாரபூா்வமற்ற முறையில் பேச்சு நடத்தும்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றாா்.
முன்னதாக, மாநில பாஜக தலைவா் எல்.முருகன் பேசியதாவது:
தமிழகம் முழுவதும் பாஜகவில் தினமும் ஆயிரக்கணக்கானோா் இணைந்து வருகின்றனா். தமிழக பாஜகவில் எழுச்சி தொடங்கியிருக்கிறது. இந்த எழுச்சி சட்டப்பேரவைத் தோ்தலில் எதிரொலிக்கப் போகிறது.
நம்முடைய இலக்கு, நோக்கம், ஒரே குறிக்கோள் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மட்டுமே இருக்க வேண்டும். எதிா்வரும் காலம் தமிழக பாஜகவின் காலம் என்றாா்.
இந்தக் கூட்டத்தில், பாஜக மூத்த தலைவா் இல.கணேசன், துணைத் தலைவா் வி.பி.துரைசாமி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், செயற்குழு உறுப்பினா்கள் பலரும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...