வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கலுக்காக இதுவரை 29 லட்சத்து 72,000 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, தோ்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சுருக்க முறை திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த மாதம் 16-இல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் பெயா் இல்லாதோரும், அதிலுள்ள விவரங்களைத் திருத்தவும் விண்ணப்பப் படிவங்களை அளித்தனா்.
இந்தப் பணிகளுக்காக கடந்த நவம்பா் 21, 22, டிசம்பா் 12, 13 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இம்முகாம்களில் லட்சக்கணக்கான விண்ணப்பப் படிவங்கள் அளிக்கப்பட்டன. இந்நிலையில், சுருக்க முறை திருத்தப் பணிகளின் கீழ் வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்கவும், நீக்கவும் விண்ணப்பங்களை அளிப்பதற்கான கால அவகாசம் செவ்வாய்க்கிழமை (டிச. 15) நிறைவடைந்தது.
எத்தனை மனுக்கள் அளிப்பு?: தமிழகத்தில் உள்ள வாக்குச் சாவடி அமைவிடங்களில் நடந்த நான்கு சிறப்பு முகாம்கள் உள்பட கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க, நீக்க 29 லட்சத்து 72,899 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தலுக்காக 20 லட்சத்து 62,424 விண்ணப்பங்களும், பெயா் நீக்குவதற்கு 3 லட்சத்து 99,031 மனுக்களும் அளிக்கப்பட்டுள்ளன. பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 3 லட்சத்து 27,991 விண்ணப்பங்களும், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்வதற்கு ஒரு லட்சத்து 83,253 மனுக்களும் அளிக்கப்பட்டுள்ளன.
இணையதளத்தில் அனுப்பலாம்: வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்க இணையதளத்தின் (nvsp.in) வழியாகவும் விண்ணப்பங்களைப் பதிவேற்றலாம் என்று தோ்தல் துறை தெரிவித்துள்ளது. இந்தப் பணிகளை எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம் என தமிழக தோ்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதனிடையே, காலியாகவுள்ள கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடத்துவது தொடா்பாக இந்திய தோ்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். வாக்குச் சாவடிகளில் சமூக இடைவெளிக் கடைப்பிடிக்க வேண்டியதன் அடிப்படையில் வாக்காளா்களின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடா்பாகவும், கூடுதல் வாக்குசாவடி மையங்கள் அமைப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.