/

தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவு: முதல்வர் இரங்கல்

பண்பாட்டு ஆய்வாளரும், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்த் துறையின் முன்னாள் தலைவருமான தொ.பரமசிவன் (70) மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

News image
தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவு: முதல்வர் இரங்கல்
Updated On :25 டிசம்பர் 2020, 9:29 am

DIN


பண்பாட்டு ஆய்வாளரும், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்த் துறையின் முன்னாள் தலைவருமான தொ.பரமசிவன் (70) மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாளையங்கோட்டை கீழ யாதவர் தெருவில் வசித்து வந்த தொ.பரமசிவன், உடல்நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை மாலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரவு 7.45 மணிக்கு காலமானார். 

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்ட  இரங்கல் செய்தியில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளரும், எழுத்தாளரும், பேராசிரியரும், மாணவர்களாலும், வாசகர்களாலும் “தொ.ப” என அன்போடு அழைக்கப்பட்ட முனைவர் தொ.பரமசிவன் அவர்கள் நேற்று (24.12.2020) உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

முனைவர் தொ. பரமசிவன் அவர்கள் இளையான்குடியில் உள்ள ஜாகிர் உசேன் கல்லூரியிலும், மதுரை தியாகராஜர் கல்லூரியிலும் பேராசிரியராகவும் மற்றும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறை தலைவராகவும் பணியாற்றியவர்.

முனைவர் தொ. பரமசிவம் அவர்கள் பேராசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், போன்ற பன்முகத்தன்மை கொண்டவர். இவர் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு வரலாற்று வரைவுத் திட்டத்தில் உறுப்பினராக பணியாற்றியவர். பல நூல்களை எழுதியவர். இவர் எழுதிய “அழகர் கோயில்” மற்றும் “அறியப்படாத தமிழகம்” போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இதில் அழகர் கோயில் என்ற நூல், கோயில் ஆய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

2017-ம் ஆண்டு உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் முனைவர் தொ. பரமசிவம் அவர்களுக்கு “உலகத் தமிழ் பண்பாளர் விருது” வழங்கி கௌரவித்தது. தமிழ் மொழியின் மீது பற்றும், பாசமும் கொண்ட முனைவர் தொ. பரமசிவம் அவர்களின் மறைவு அவர்தம் குடும்பத்திற்கும், தமிழ் அறிஞர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.