பட்டாபிராமில் கட்டப்பட உள்ள டைடல் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்
பட்டாபிராமில் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.


சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், பட்டாபிராமில் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
இப்புதிய டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவானது 10 ஏக்கர் நிலப்பரப்பில், 5.57 லட்சம் சதுரஅடி கட்டட பரப்பளவில், 21 அடுக்குமாடிக் கட்டடமாக அமையவுள்ளது. இப்பூங்கா நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகங்கள், தொழில் மையங்கள், பொது கட்டமைப்புகள், ஆகாயப் பூங்கா என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளன.
தென் சென்னையில் டைடல் பூங்கா உருவாக்கிய வளர்ச்சியைப் போலவே, சென்னையின் வடக்குப் பகுதியில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு அடித்தளமாக இத்திட்டம் அமையும். இதனைச் சுற்றி பல தொழில் நிறுவனங்கள் உருவாவதை ஊக்குவித்து, சுமார் 25,000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இத்திட்டம் 24 மாதங்களில் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
இத்திட்டம் தமிழ்நாட்டின் ஒரு முக்கிய அடையாளமாகவும், சென்னையின் வடபகுதியில் உள்ள இடங்களில் சமூக, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் அடித்தளமாகவும் அமையும். புத்தொழில்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நவீன நுட்பங்களை உருவாக்கிடும் புத்தாக்க நிறுவனங்கள் என, நாளைய உலகை நோக்கி தமிழ்நாட்டை அழைத்துச் செல்லும் தொலைநோக்குத் திட்டமாக இது அமையும்.
இந்நிகழ்ச்சியின் போது, டைடல் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக தமிழக முதல்வரிடம் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் வழங்கினார்.
மேலும், கரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் “கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம்” என்ற திட்டத்தினை தமிழக முதல்வர் பழனிசாமி 31.3.2020 அன்று அறிவித்தார்கள்.
இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அவரவர் இருப்பிடத்திலிருந்தே நேரடி தொடர்பின்றி இணையதளம் மூலம் விரைவாக 25 லட்சம் ரூபாய் வரை தமிழ்நாடு அரசின் 6% வட்டி மானியத்துடன் பிணை சொத்தின்றி கடன் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்று, இன்று வரை 855 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 112 கோடி ரூபாய் கடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 5 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் கடன் தொகைக்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...