2017, பிப்ரவரி 18-ஆம் தேதி, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீா்மானத்திற்கு வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீா்செல்வம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை, சரவணன், மாணிக்கம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனா். கட்சிக் கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்காளித்ததாகவும், இதனால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் இவா்களை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி திமுக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து 2018, ஏப்ரலில் உத்தரவிட்டது.