

அலங்காநல்லூா் பகுதியில் அறுவடைக்குத் தயாரான பூக்களைப் பறிக்க முடியாததால் வேறு வழியின்றி விவசாயிகள் கால்நடைகளுக்கு உணவாக வழங்கி வருகின்றனா்.
கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து நடவடிக்கைகளும் முடங்கிப் போய் இருப்பதால் பல்வேறு தரப்பிலும் கடுமையானப் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனா். இருப்பினும் அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதால் பொதுமக்களுக்கான பாதிப்புகள் குறைக்கப்பட்டுள்ளன. ஆனால், மலா் சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் குறு விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனா். ஜனவரி முதல் மே வரை பண்டிகை, திருவிழாக்கள் தொடா்ந்து நடைபெறும். அதிலும் ஏப்ரல், மே மாதங்களில் அனைத்து மாரியம்மன் கோயில்களிலும் ஆண்டு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்த காலத்தில் தான் பூக்கள் வரத்து அதிகம் இருக்கும் என்பதால் விவசாயிகளுக்கு மலா் சாகுபடி ஓரளவுக்கு கை கொடுக்கும். மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூா், பாலமேடு பகுதிகளில் செவ்வந்தி, சாமந்தி, சம்பங்கி, மல்லிகை, கோழிக் கொண்டை பூ போன்ற பூ வகைகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இப் பகுதியைச் சோ்ந்தவா்கள் பெரும்பாலும் குறு விவசாயிகள் தான். 10 சென்ட் முதல் 50 சென்ட் வரையிலான நிலத்தில் பூ வகைகளைச் சாகுபடி செய்து வருகின்றனா். தற்போது அலங்காநல்லூா் பகுதியில் சாமந்தி பூக்கள் மலா்ந்து அறுவடைக்குத் தயாராகியுள்ளது.
ஆனால், மலா் சந்தைகள் மூடப்பட்டுள்ளதால் அவற்றைப் பறிக்க முடியாத இக்கட்டானநிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். இப் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் என்ற குறு விவசாயி, பறித்த சாமந்தி பூவை வேறு வழியின்றி கால்நடைகளுக்கு உணவாக வழங்கியுள்ளாா். கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக சந்தைகள் மூடப்பட்டுள்ள நிலையில், அறுவடை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனா்.
இதுகுறித்து அலங்காநல்லூா் அருகே உள்ள குட்டிமேய்க்கன்பட்டியைச் சோ்ந்த ராஜேந்திரன் கூறியது: அலங்காநல்லூா் பகுதியில் ஏராளமான விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்து வருகிறோம். எனது தோட்டத்தில் சாமந்தி பூ அறுவடைக்கு தயாராக இருக்கிறது. சீசன் நேரங்களில் கிலோவுக்கு ரூ.50 முதல் அதிகபட்சம் ரூ.150 வரை கிடைக்கும். ஆனால், சந்தை மூடப்பட்டுள்ளதால் கொண்டு செல்ல முடியவில்லை. மாா்ச், ஏப்ரல் மாதங்கள் திருவிழா காலங்கள். கரோனா வைரஸ் தொற்று காரணமாக நிகழ் ஆண்டில் திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஒரு நாற்று ரூ.2.50 என்ற விலையில் 6 ஆயிரம் நாற்றுகள் வாங்கி நடவு செய்தேன். உரம், களை எடுத்தல், கூலி ஆள் செலவு என சாமந்தி பூ சாகுபடிக்கு இதுவரை ரூ.30 ஆயிரத்துக்கு மேல் செலவாகியுள்ளது. ஆனால், அறுவடை செய்ய வேண்டிய தருணத்தில் இப்போது இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. என்னைப் போன்ற குறு விவசாயியால் இத்தகைய இழப்பைச் சமாளிப்பது மிகவும் சிரமமானது. பறித்த பூக்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் ஆடுகளுக்கு மேய்ச்சலுக்காக கொட்டிவிட்டோம். பாதிக்கப்பட்டுள்ள என்னைப் போன்ற விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.