சென்னையில் உ.வே.சா. வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக்கப்படுமா?

தமிழ்த்தாத்தா உ .வே. சாமிநாதையர் சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக்கப்படுமா என தமிழறிஞர்கள் எதிர்பார்க்கின்றனர். 
சென்னையில் உ.வே.சா. வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக்கப்படுமா?
Updated on
2 min read



தமிழ்த்தாத்தா உ .வே. சாமிநாதையர் சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்த வீடு  நினைவு இல்லமாக்கப்படுமா என தமிழறிஞர்கள் எதிர்பார்க்கின்றனர். 

தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படும் டாக்டர் உ.வே. சாமிநாதையர்,  தமிழ் மொழிக்குச் செய்திருக்கும் தொண்டு அளப்பரியது. அழிந்து கொண்டிருந்த ஓலைச் சுவடிகளை, பண்டைய இலக்கியங்களை மீட்டெடுக்க,  வாகன வசதி எதுவும் இல்லாத அக்கால கட்டத்தில் கால்நடையாகவும், மாட்டு வண்டியிலும் ஊர் ஊராகச் சென்று இலக்கிய ஓலைச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை  ஒன்று திரட்டி அச்சிட்டு, அவர் தந்துள்ள தமிழ்க் கருவூலங்கள் ஏராளம். பண்டைய இலக்கியங்கள் அவரால் மீட்கப்படவில்லை எனில், தமிழைச் செம்மொழி என்று மெய்ப்பிக்கச் சான்றுகள் இல்லாமல் போயிருக்கும்.

டாக்டர் உ.வே. சாமிநாதையர், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் உத்தமதானபுரத்தில் (தற்போது திருவாரூர் மாவட்டம்) 1855 -ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி பிறந்தார். தனது 17-ஆம் வயதில் மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ்ப் பயிலத் தொடங்கி, மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மறைவு வரை அவரது மாணவராகவே இருந்து தமிழைப் பயின்றார். உலகிலேயே ஆசிரியர்-  மாணவர் உறவுக்கு அவர்கள் இலக்கணமாகத் திகழ்ந்தார்கள் என்றால் அது மிகையாகாது.

முதலில் 1880-இல் குடந்தை அரசுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய உ.வே.சா,  பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் 16 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். அதை நினைவுகூரும் வகையில் மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. 

சென்னைக்கு வந்த பிறகு திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன்பேட்டையில், தங்கி தமிழ்ப் பணிகளைத் தொடர்ந்தார்.  உ.வே.சா. மறைவுக்குப் பிறகு, அவரது மகன் கல்யாணசுந்தரம், அந்த வீட்டில் தங்கியிருந்து தந்தை விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார்.
சுமார் 60 ஆண்டு காலம் தமிழை வாசித்து, தமிழையே சுவாசித்து,  சிந்தையிலும்,  செயலிலும் தமிழால் நிரம்பியிருந்த உ.வே. சா வாழ்ந்த இல்லம், தமிழ்த் தெய்வத் திருக்கோயிலாகப் போற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அடையாளம் தெரியாத அளவுக்கு அந்த இல்லம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது, தமிழார்வலர்களின் நெஞ்சை நெருடுவதாக உள்ளது.  

இதன் காரணமாக, உ.வே.சா வாழ்ந்த திருவல்லிக்கேணி இல்லத்தை புதுப்பித்து,  அவரது தமிழ்ப் பணியை நினைவு கூரும் வகையில், அதை நினைவு இல்லமாக்க வேண்டும் என்ற ஆவல் தமிழ் ஆர்வலர்களிடையே மேலோங்கி வருகிறது. 

இதுகுறித்து, தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் ஆர்வலர் புலவர் உதயை மு. வீரையன் கூறியது: பாரதியாருக்கு அவர் பிறந்த எட்டயபுரத்திலும், அவர் வாழ்ந்த சென்னையிலும் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையருக்கு, அவர் பிறந்த  ஊரான திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்துக்குள்பட்ட உத்தமதானபுரத்தில் மட்டும் அரசு சார்பில் நினைவு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு,  அவர் பிறந்த தினமான பிப்ரவரி 19-ஆம் தேதி அன்று அரசு சார்பில் ஒரு விழா சம்பிரதாயமாக நடைபெறுகிறது.  உ.வே.சா. புகழைப் பரப்பும் வகையில் தமிழறிஞர்கள் பங்கேற்கும் நிகழ்வுகள் எதுவும் சென்னையில் நடைபெறுவதில்லை.

எனவே, சென்னையில் திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன்பேட்டையில் உ.வே.சா. வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக்க வேண்டும்.  அவ்வாறு சென்னையில் அவருக்கு நினைவு இல்லம்  அமைக்கப்பட்டால், உலகத் தமிழறிஞர்கள் ஒன்று கூடி தமிழ் வளர்க்கும் மையமாக அந்த இடம் நிச்சயம் விளங்கும். இது, உ.வே.சா.வின் புகழை குன்றின் மேலிட்ட விளக்காகப் பிரகாசிக்கச் செய்ய முடியும்.  இதுகுறித்து தமிழக முதல்வரும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரும் சிறப்புக் கவனம் செலுத்தி நினைவு இல்லம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com