புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் நடைமுறை வெளிப்படையாக இருக்க வேண்டும்: பி.ஆர்.நடராஜன் 

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் நடைமுறைகள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும்..
புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் நடைமுறை வெளிப்படையாக இருக்க வேண்டும்: பி.ஆர்.நடராஜன் 

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் நடைமுறைகள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில்தான் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். கரோனா பொது முடக்கக் காலத்தில் வேலை இல்லாததால் தொழிலாளர்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.

தங்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க கோரி ஆன்லைனில் விண்ணப்பித்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அந்தத் தொழிலாளர்களைச் சொந்த ஊர்களுக்கு ரயில்களில் அனுப்பிவைக்கும் நடைமுறை உரியத் திட்டமிடல், முன்னேற்பாடுகள் இல்லாமல் பல்வேறு குளறுபடிகளுடன் உள்ளது. இதனால் பதிவு செய்து மாதக்கணக்கில் காத்திருக்கும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியவில்லை.ரயில்கள் இயக்கப்படும் தகவல்கள் கிடைத்து தொழிலாளர்கள் ரயில் நிலையத்துக்கு கூட்டமாக வருவதும், அவர்களைக் காவல் துறையினர் விரட்டி அடிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. எனவே, புலம் பெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் நடைமுறை வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். எந்தெந்த நாள்களில் எந்தெந்த ஊர்களுக்கு ரயில்கள் செல்லும் என்ற கால அட்டவணையை வெளியிட வேண்டும்.

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருவதால் வங்கிக் கடன்கள் உடனடியாகக் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வங்கிகளில் பெற்ற தொழில் கடன்களுக்கு வட்டியை அரசே ஏற்க வேண்டும். மேலும், அசல் கடன் தொகையை வசூலிப்பதை ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும். வங்கிகளில் சி.சி.கணக்கு வைத்திருப்போருக்கு மட்டும்தான் ரூ.3 லட்சம் கோடி சிறப்பு பொருளாதாரத்திடத்தில் கூடுதல் கடன் தரப்படும் என்று நிபந்தனை விதித்துள்ளனர். அந்தக் கட்டுப்பாட்டைத் தளர்த்தி எல்லாவிதமான வங்கிக்கணக்கு வைத்திருப்போருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி ரீபண்டு நிலுவைத் தொகையை உடனியாக வழங்க வேண்டும். கரோனா பொது முடக்கக் காலத்திலும் விவசாய விளைநிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கோவை மாவட்டத்தில் இழப்பீடு வழங்கியது போல் திருப்பூர் மாவட்டத்திலும் சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆகவே, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்கும் வரையில் உயர்மின் கோபுர திட்டப்பணிகளை மாவட்ட நிர்வாகம் நிறுத்தி வைக்க வேண்டும் என்றார்.

இந்த சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com