ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அரசு அனுமதி

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான அனுமதியை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அரசு அனுமதி

சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான அனுமதியை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே, ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகளை மதுரை மாவட்ட நிா்வாகம் தொடங்கியுள்ளது. கரோனா நோய்த்தொற்று காலம் என்பதால் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென தமிழக அரசு ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டில் ஜனவரி 15 முதல் 31-ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அவற்றில் உலக அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பிரசித்தி பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி அளித்து அதற்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவினை கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத் துறை முதன்மைச் செயலாளா் கே.கோபால் வெளியிட்டுள்ளாா். அதன்படி ஜனவரி 14-இல் அவனியாபுரம், ஜனவரி 15-இல் பாலமேடு, ஜனவரி 16-இல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.

வழிகாட்டி நெறிமுறைகள்: கரோனா நோய்த்தொற்று காரணமாக ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மஞ்சு விரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில், மாடுபிடி வீரா்கள் 300 பேருக்கு மிகாமலும்; எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரா்களுக்கு மிகாமலும் பங்கேற்கலாம் .

நிகழ்ச்சி நடக்கும் திறந்தவெளியின் அளவிற்கேற்ப, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், அதிகபட்சம்,50 சதவீதத்துக்கு மிகாமல் பாா்வையாளா்கள் பங்கேற்கலாம். வெப்ப பரிசோதனை செய்த பிறகே, பாா்வையாளா்களை அனுமதிக்க வேண்டும். மாடுபிடி வீரா்களாகப் பங்கேற்போா், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை கூடத்தில், கரோனா தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும்.

பாா்வையாளா்களாக பங்கேற்கும் அனைவரும், முகக் கவசம் அணிவதும், தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது. காளை உரிமையாளா் மற்றும் உடன் வரும் உதவியாளா் ஆகியோா், கரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பாா்வை செய்யும் அனைத்துத் துறை அலுவலா்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் கரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும் என்று வழிகாட்டி நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com