மானாமதுரை வைகை ஆற்றில் தடுப்பணை: மக்கள் வரவேற்பு

 சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றில் புதிதாக அமைக்கப்படவுள்ள தடுப்பணை திட்டத்திற்கு பொதுமக்கள்  மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்
மானாமதுரை வைகை ஆற்றில் தடுப்பணை: மக்கள் வரவேற்பு

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றில் புதிதாக அமைக்கப்படவுள்ள தடுப்பணை திட்டத்திற்கு பொதுமக்கள்  மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

  மதுரை மாவட்டம் விரகனூர் மதகு அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் மதகு அணை வரை திருப்புவனம், மானாமதுரை பகுதி வைகை ஆற்றுக்குள் மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கான பிரதான மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

 மேலும், வைகை ஆற்றை ஒட்டி ஏராளமான விவசாயக் கிணறுகளும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் வறட்சி ஏற்பட்டு வைகை ஆற்றுக்குள் நிலத்தடி நீராதாரம் குறைந்து  குடிநீர் திட்டங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பாதிப்பு ஏற்படும் நிலை இருந்து வருகிறது.

இதனால் வைகை ஆற்றில் கோடை காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர வைகை ஆற்றுக்குள் தடுப்பணைகள் கட்டி தண்ணீர் தேக்கப்படுகிறது.

   திருப்புவனம் ஒன்றியத்தில் தட்டான்குளம், லாடனேந்தல் மானாமதுரை ஒன்றியத்தில் ஆதனூர் ஆகிய இடங்களில் ஏற்கனவே வைகை ஆற்றுக்குள் தடுப்பணைகள் கட்டப்பட்டு மழைக் காலங்களிலும் ஆற்றில் தண்ணீர் வரும் போதும்  இந்த தடுப்பணைகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.

 இதன்மூலம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் செயல்படும் குடிநீர் திட்டங்களுக்கு நீர் ஆதாரம் கிடைத்து வருகிறது. 

தற்போது மானாமதுரை நகரை ஒட்டியுள்ள ஆதனூர்   தடுப்பணையில் சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு  ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு கடல் போல் காட்சியளிக்கிறது. 

வரும் அக்டோபர், நவம்பர் மாதம் வரை இந்த தண்ணீர் இந்த தடுப்பணையில் தேக்கி வைக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறையினர் (நீர்வள ஆதாரம்) தெரிவித்தனர்.

 இந்நிலையில் கடந்த அதிமுக  அரசு மாநிலம் முழுவதும் 11 இடங்களில் ஆற்றுப் படுகைகளில் தடுப்பணைகள் கட்ட ரூ.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

 இதில் மானாமதுரை ஒன்றியம் கீழப்பசலை என்ற இடத்தில வைகையாற்றுக்குள் புதிதாக தடுப்பணை கட்டவும்  அரசு முடிவு செய்து இத்திட்டத்திற்காக ரூ.4.96 கோடி நிதி ஒதுக்கீடு செய்து திட்டப் பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 

இன்னும் சில வாரங்களில் இங்கு தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 வைகை ஆற்றின் குறுக்கே 300 மீட்டர் நீளத்திற்கும் இந்த தடுப்பணை அமைக்கப்படுகிறது. ஏற்கனவே திருப்புவனம்,  மானாமதுரை ஒன்றியங்களில் 3 தடுப்பணைகள் கட்டி தண்ணீர் தேக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது கூடுதலாக மானாமதுரை ஒன்றியத்தில் கீழப்பசலை வைகை ஆற்றுக்குள் தடுப்பணை அமைத்து தண்ணீர் தேக்கும் அரசின் முடிவுக்கு மானாமதுரை பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 இந்த தடுப்பணை அமைக்கப்படுவதன் மூலம் மானாமதுரை பகுதியில் செயல்படும் குடிநீர் திட்டங்கள் விவசாய பாசனக் கிணறுகளில் கூடுதலாக நீர் ஆதாரம் உயரும் என நம்பப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com