
திருச்சி: திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் பொறுப்புகளை வகித்து வந்த கணவன், மனைவி இருவரும் அமைச்சர் கே.என். நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்து அதிமுகவினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளனர்.
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மருத்துவர் அணி தலைவர் கே.எஸ். சுப்பையா பாண்டியன். இவரது மனைவி தமிழரசி சுப்பையா பாண்டியன், மாநகர் மாவட்ட மகளிரணி செயலராகவும், அதிமுக மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். இந்த இருவரும் அடுத்தடுத்து திமுகவில் இணைந்துள்ளனர்.
சித்த மருத்துவரான சுப்பையா பாண்டியன், திருச்சி தில்லைநகரில் கிளினிக் நடத்தி வருகிறார். மேலும், இவர் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது வேட்பாளர் அறிவிப்பில் அதிருப்தியில் இருந்த சுப்பையா பாண்டியன், திருச்சி கிழக்கு தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட மனோகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், அதிமுகவிலிருந்து திடீரென விலகிய சுப்பையா பாண்டியன், சென்னை மயிலாப்பூரில் உள்ள திமுக முதன்மை செயலாளரும், நகரபுற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு இல்லத்திற்கு வியாழக்கிழமை நேரில் சென்று தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக அவரது மனைவி தமிழரசி, திருச்சி தில்லை நகரில் உள்ள திமுக அலுவலகத்தில் வெள்ளக்கிழமை காலை, அமைச்சர் கே.என். நேருவை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பரவலாக திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்த சுப்பையா பாண்டியன், அவரது மனைவி தமிழரசி ஆகியோர் திமுகவில் இணைந்து இருப்பது திருச்சி அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.