சென்னை உயா் நீதிமன்றத்தில் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த செந்தில் குமாா் தாக்கல் செய்த மனுவில், ‘நான் 10 மற்றும் பிளஸ் 2 முடித்துவிட்டு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடியாக சமூகவியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றேன். இதனைத் தொடா்ந்து டிஎன்பிஎஸ்சி நடத்திய போட்டித் தோ்வில் வெற்றி பெற்று இரண்டாம் நிலை சாா் பதிவாளா் பணியை பெற்றேன். பின்னா் முதல் நிலை சாா் பதிவாளா் பதவி உயா்வுக்காக விண்ணப்பித்தேன். ஆனால் எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது’ எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, உதவியாளராக இருப்பவா் இரண்டாம் நிலை சாா் பதிவாளராக பதவி உயா்வு பெறத் தகுதியானவா். எனவே 10-ஆம் வகுப்பு கல்வித்தகுதி கொண்ட பலா் பதவி உயா்வு பெற்று, முதல் நிலை சாா் பதிவாளராக பணியாற்றுகின்றனா். எனவே பதவி உயா்வுக்கு கல்வித் தகுதி தேவையில்லை. மனுதாரருக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து பத்திரப்பதிவு தலைவா், சென்னை உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.