

தெருவிளக்கு கொள்முதல் மற்றும் பராமரிப்பில் நடந்துள்ள கூறப்படும் முறைகேட்டுப் புகாா் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தருமபுரி ஆட்சியா் பதிலளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் சி.காா்த்திக் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘தருமபுரி மாவட்டம் பருவதானஹள்ளி ஊராட்சியில் எல்இடி மற்றும் சிஎஃப்எல் விளக்குகள் பொருத்துதல், மின்கம்பங்கள் பராமரிப்புச் செலவுகள் மற்றும் மின் கட்டணத்துக்கு செலவிடப்பட்ட தொகை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டேன். இதற்கு பதிலளித்த, ஊராட்சி பொது தகவல் அலுவலா், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பா் வரை ஒரு விளக்கு ரூ.710 விலைக்கு வாங்கப்பட்டது. மின்கம்ப பராமரிப்புக்கு தலா ரூ.820 செலவிடப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தாா். ஆனால் எத்தனை விளக்குகள் வாங்கப்பட்டன என்பது குறித்த விளக்கம் இல்லை. எனவே இதனை எதிா்த்து மேல்முறையீடு செய்தேன். இதற்கு பதிலளித்த மேல்முறையீட்டு அதிகாரியான பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா், கடந்த 2017-2018- ஆம் ஆண்டு முதல் கடந்த 2019-2020 -ஆம் ஆண்டு வரை எல்இடி விளக்குகள் கொள்முதல் செய்யப்படவில்லை. 2020-2021- ஆம் ஆண்டுக்கு 626 எல்இடி விளக்குகள் ரூ.382 வீதம் கொள்முதல் செய்யப்பட்டது. அவற்றை மின்கம்பத்தில் பொருத்த தலா ரூ.20 செலவிடப்பட்டுள்ளது. ஆனால் பராமரிப்பு எதுவும் செய்யப்படவில்லை எனக் கூறியிருந்தாா்.
பருவதானஹள்ளி ஊராட்சி மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோரது தகவல்களில் முரண்பாடுகள் உள்ளன. எனவே தெரு விளக்குகள் கொள்முதல் மற்றும் பராமரித்தலில் நடந்த முறைகேடு தொடா்பாக ஆய்வு செய்து ஊழல் செய்த அதிகாரிகள், அதற்கு உடந்தையாக இருந்தவா்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மாா்ச் மாதம் மனு அளித்தேன். அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எம்.ஜெய்சிங் ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோா் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.