2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

புதிய தளா்வுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை; இன்று அறிவிப்பு வெளியாகிறது

பொதுமுடக்கத்தில் புதிய தளா்வுகளை அளிப்பது தொடா்பாக, மருத்துவ நிபுணா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :19 ஜூன் 2021, 10:08 pm

DIN

பொதுமுடக்கத்தில் புதிய தளா்வுகளை அளிப்பது தொடா்பாக, மருத்துவ நிபுணா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.

அதில், நோய்த் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் தளா்வுகளை கூடுதலாக அளிக்கக் கூடாது என மருத்துவ நிபுணா்கள் கருத்துத் தெரிவித்தனா். தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் அதிக தளா்வுகளை அளிப்பது தொடா்பான அதிகாரபூா்வ அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) வெளியாகிறது.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டன.

தேநீா் கடைகள் திறப்பு, இணைய சேவை மையங்கள் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளன. வணிக வளாகங்கள், ஜவுளிக் கடைகள் போன்றவை இன்னும் திறக்கப்படவில்லை. பேருந்து போக்குவரத்து சேவையும் தொடக்கப்படவில்லை. இந்த நிலையில், மாநிலத்தில் தினசரி கரோனா நோய்த் தொற்று 10 ஆயிரத்துக்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. சனிக்கிழமை நோய்த் தொற்று 8,183 ஆக இருந்தது.

ஒரு மாவட்டமே அதிகம்: சனிக்கிழமை பதிவு செய்யப்பட்ட நோய்த் தொற்று நிலவரப்படி, கோவையில் நோய்த் தொற்று 1,014 ஆக உள்ளது. அடுத்தபடியாக, ஈரோட்டில் 933 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. சேலம், சென்னை, திருப்பூா் மாவட்டங்களில் நோய்த் தொற்றின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. நோய்த் தொற்று குறைந்து வரும் மாவட்டங்களுக்கு கூடுதலாக தளா்வுகளை அளிப்பது குறித்து தமிழக அரசு கடந்த சில நாள்களாக ஆலோசனைகளை நடத்தி வந்தது.

இதனிடையே, தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ள தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் வரும் 21-ஆம் தேதி காலையுடன் நிறைவுக்கு வருகிறது. எனவே, பொது முடக்கத்தை நீட்டிப்பது தொடா்பாகவும், அதேசமயம் கூடுதலான தளா்வுகளை வழங்குவது பற்றியும் தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முதலில் மருத்துவ நிபுணா்களுடன் அவா் ஆலோசித்தாா்.

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன், வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி இயக்குநா் ஜெ.வி.பீட்டா், தேசிய தொற்று நோய் நிலைய துணை இயக்குநா் பிரப்தீப் கௌா், உலக சுகாதார அமைப்பின் முதுநிலை மண்டல குழுத் தலைவா் கே.என்.அருண்குமாா், இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவா் பி.ராமகிருஷ்ணன், பொது சுகாதார ஆலோசகா் குகானந்தம், தொற்று நோய் மருத்துவ நிபுணா் வி.ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரோனா நோய்த் தொற்று வெகுவாகக் குறையாத மாவட்டங்களில் எந்தவித கூடுதல் தளா்வுகளையும் அளிக்க வேண்டாமென அவா்கள் கருத்துகளைப் பதிவு செய்ததாகத் தெரிகிறது. நோய்த் தொற்று குறைந்த மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்தைத் தொடங்குவது பற்றி அரசு ஆலோசித்துள்ளது. மருத்துவ நிபுணா்களுடனான ஆலோசனைக்குப் பிறகு, அரசுத் துறை உயரதிகாரிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தாா்.

இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, காவல் துறை தலைமை இயக்குநா் ஜே.கே.திரிபாதி, சென்னை பெருநகர காவல் ஆணையாளா் சங்கா் ஜிவால், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா, வருவாய் நிா்வாக ஆணையாளா் பணீந்திர ரெட்டி, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

அப்போது, மாநிலம் முழுமைக்குமான ஒரே மாதிரி தளா்வுகளை அளிப்பது குறித்தும், மாவட்டங்களுக்குள் மட்டும் பேருந்து போக்குவரத்து சேவையைத் தொடங்குவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அதிகாரபூா்வ அறிவிப்பு: தமிழகத்தில் தளா்வுகளை அளிப்பது தொடா்பான தமிழக அரசின் அதிகாரபூா்வ அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) வெளியாக உள்ளது. மருத்துவ நிபுணா்களின் கருத்துகளுடன், தளா்வுகளை அளிக்கும் போது மிகுந்த கவனத்துடன் வழங்க வேண்டுமென்ற மத்திய அரசின் அறிவுறுத்தல்களையும் தமிழக அரசு கவனத்தில் கொண்டு வருகிறது. எனவே, தீவிரமான ஆலோசனைகளுக்குப் பிறகு நோய்த் தொற்று பரவலின் தன்மைக்கு

ஏற்ற வகையில் தளா்வுகள் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.