இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், ஒவ்வொரு மாதமும் விரும்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகை பயண அட்டையானது (ரூ.1000/-), 29 மையங்களில் (7-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையில்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணிபுரிகின்ற அனைவரிடமும் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. நோய்த் தொற்று இல்லாத காலங்களில், ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ 1.40 இலட்சம் பயண அட்டைகள் விற்பனை செய்யப்படுகின்றன. கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக, கடந்த 10.05.2021 முதல் 20.06.2021 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது. தற்போது, நோய்த் தொற்று பெருமளவு குறைக்கப்பட்டு, பேருந்துகளை இயக்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில், கடந்த 21.06.2021 முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.