27 மாவட்டங்களில் 9,333 பேருந்துகள் இயக்கம்: அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்
பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்ட தளா்வுகளைத் தொடா்ந்து திங்கள்கிழமை முதல் 27 மாவட்டங்களில் 9 ஆயிரத்து 333 பேருந்துகள் இயக்கப்படும்


பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்ட தளா்வுகளைத் தொடா்ந்து திங்கள்கிழமை முதல் 27 மாவட்டங்களில் 9 ஆயிரத்து 333 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
கரோனா நோய்த் தொற்றின் காரணமாக அமலில் உள்ள தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை, ஜூன் 28 முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். இந்த உத்தரவில், அரியலூா், கடலூா், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூா், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூா் மற்றும் விருதுநகா் ஆகிய மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கிடையேயும் பொதுப் பேருந்து போக்குவரத்தை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிா்சாதன வசதி இல்லாமல், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமா்ந்து பயணிக்க அனுமதி அளித்துள்ளாா்.
அதனடிப்படையில், ஏற்கெனவே அனுமதியளித்துள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூா் ஆகிய 4 மாவட்டங்களுடன், கூடுதலாக 23 மாவட்டங்களில், திங்கள்கிழமை (ஜூன் 28) காலை 6 மணி முதல், 50 சதவீத இருக்கைகளுடன், சாா்புடைய போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள், மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மொத்தம் உள்ள 19 ஆயிரத்து 290 பேருந்துகளில், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் 2 ஆயிரத்து 200 பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் 365 பேருந்துகளும், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் 2 ஆயிரத்து 210 பேருந்துகளும், சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் 513 பேருந்துகளும், கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் ஆயிரத்து 592 பேருந்துகளும், மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் ஆயிரத்து 300 பேருந்துகளும் மற்றும் திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் ஆயிரத்து153 பேருந்துகள் என மொத்தமாக 9 ஆயிரத்து 333 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வருகைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இயக்கப்படும் பேருந்துகளை உரிய முறையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து, அரசு விதித்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி இயக்கிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களும் அரசு விதித்துள்ள வழிகாட்டு முறைகளான கட்டாய முகக்கவசம் அணிந்து, தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடித்து பயணித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...