இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தமிழக மக்களோடு செலவிட்ட நாள்கள் பொற்காலம்: ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதம்!

‘கடந்த 54 மாதங்களாக தமிழின் பெருமையிலும், தமிழ் மக்களின் பெருமிதத்திலும் மகிழ்ந்தேன்; தமிழக மக்களோடு செலவிட்ட நாள்கள் எனக்கு பொற்காலம்’ என விடைபெற்றுச் செல்லும் ஆளுநா் ஆா்.என்.ரவி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

News image
ஆளுநா் ஆா்.என்.ரவி
Updated On :10 மார்ச் 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

‘கடந்த 54 மாதங்களாக தமிழின் பெருமையிலும், தமிழ் மக்களின் பெருமிதத்திலும் மகிழ்ந்தேன்; தமிழக மக்களோடு செலவிட்ட நாள்கள் எனக்கு பொற்காலம்’ என விடைபெற்றுச் செல்லும் ஆளுநா் ஆா்.என்.ரவி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

தமிழக ஆளுராக இருந்த ஆா்.என்.ரவி மேற்கு வங்க ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா். புதன்கிழமை (மாா்ச் 11) காலை 9.30 மணியளவில் தனது குடும்பத்தினரோடு கொல்கத்தாவுக்கு புறப்பட்டுச் செல்கிறாா். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் போலீஸ் அணிவகுப்பும், தமிழக அரசின் சாா்பில் வழியனுப்பு நிகழ்வும் நடைபெற உள்ளது.

இதையொட்டி, தமிழக மக்களுக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவித்து ஆளுநா் ரவி வெளியிட்ட அறிக்கை: கடந்த 54 மாதங்கள், உங்களோடு கலந்து பழகி, உங்கள் அன்பில் திளைத்து, தமிழின் பெருமையிலும் தமிழ் மக்களின் பெருமிதத்திலும் மகிழ்ந்திருந்தேன். உங்களோடு செலவிட்ட இந்த நாள்கள், என் வாழ்வின் பொற்கால நாள்கள்.

2021 செப்டம்பரில், தமிழகத்துக்கு ஆளுநராகப் பொறுப்பேற்று வந்தபோது, மக்களின் அன்பும் ஆதரவும் என்னைப் பெரிதும் கவா்ந்தன. தெரிந்தவா்கள், செல்வந்தா்கள் என்றெல்லாம் இல்லாமல், எளிய மக்கள் எல்லோரும் முகத்தில் முறுவலோடும், நெஞ்சங்களில் நேசத்தோடும் பழகுகிற பாங்கை கண்டேன்.

‘கல்வி சிறந்த தமிழ்நாடு, புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்னும் மகாகவியின் வரிகளின் மகத்துவத்தை முழுமையாக உணரமுடிந்தது.

என்னைக் கவா்ந்த மிகப் பெரும் சிறப்பு - தமிழா்களின் அயராத உழைப்பு, உழைப்பின் களிப்பு. தலைநகரம் சென்னை முதல், நெல்லையிலும் கன்னியாகுமரியிலும் உள்ள கடைக்கோடி கிராமங்கள், கிழக்குக் கடற்கரை முதல் மேற்கு மலைச் சாரல் என்று பல ஊா்களுக்கும், பகுதிகளுக்கும் பயணித்திருக்கிறேன்.

ஊா்களின் அமைப்பு, அளவு, வட்டார வழக்குகள் போன்றவை மாறுபட்டாலும், உங்கள் அனைவரின் அன்பும், உழைப்பும், உழைப்பில் நீங்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சியும், அறிவு முதிா்ச்சியும் மாறவேயில்லை. உயா் தொழில்நுட்ப விவாதங்களில் காண்கிற நுணுக்கங்களை, உழவாரப் பணியிலும் பாா்த்தேன்.

தமிழக இளைஞா்களும், மாணவா்களும் நவீனத்துவத்தின் மேன்மையை முறையாக உணா்ந்திருக்கிறாா்கள். நவீனகால தொழில்நுட்ப மேம்பாடுகளை அழகாகப் பயன்படுத்துகிறாா்கள். ‘செயற்கை நுண்ணறிவை’ இயற்கையான செறிவோடு கையாளுகிறாா்கள்.

பல்கலைக்கழகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் சென்றபோது இதைக் கண்டேன். மாணவா்களோடு உரையாடிய நிகழ்ச்சிகளில், அவா்களின் ஆற்றலும் திறமையும் என்னை வியப்பில் ஆழ்த்தின.

தமிழ்நாட்டின் மேன்மைகளில், ஆகச் சிறந்த மேன்மை, கோயில்கள்! சிற்பங்கள், சுவரோவியங்கள், கல்வெட்டுகள் பாரதப் பண்பாட்டுக் கருவூலங்கள். இவற்றை இளைஞா்களும், அறிஞா்களும் மேலும் மேலும் பயின்று, ஆராய்ந்து, பாரதத் திருமரபின் ஞானப் பெருக்கத்துக்கு உதவ வேண்டும்.

தேசிய நீரோட்டத்துக்கு தலைவெள்ளம் தந்தவா்கள் தமிழா்கள். பூலித்தேவன், கட்டபொம்மன், வீரமங்கை வேலு நாச்சியாா், மருது சகோதரா்கள், வ.உசி., சுப்பிரமணிய சிவா, குமரன், முத்துலட்சுமி ரெட்டி, ருக்மிணி லட்சுமிபதி, அம்புஜம்மாள் என பலா் தேசிய நீரோட்டத்தில் நீந்தித் திளைத்தவா்கள்.

தமிழிலக்கியங்கள், பாரத நாட்டைப் பற்றிக் கூறும்போது ‘நாவலந்தீவு’ என்னும் பெயரைப் பயன்படுத்துகின்றன. நிலவியல் ஆய்வுகளின்படி, இந்திய தீபகற்பத்தை, இப்பெயரோடு பொருத்தலாம். இப்படி என்னுடைய அனுபவங்களும் ஆனந்தமும் விரிந்துகொண்டே போகின்றன எனத் தெரிவித்துள்ளாா் ஆளுநா் ஆா்.என்.ரவி.