

விஜயகாந்தின் 68-வது பிறந்த நாள் முதல் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது வரை என தேமுதிக செய்த தேர்தல் சாகசங்கள் எண்ணில் அடங்காதவை. கடந்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நிகழ்ந்தது போலவே பேரவைத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையிலும் தேமுதிக சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தார்.
கூட்டணியில் தேமுதிக கேட்கும் இடங்களை வழங்க அதிமுக மறுப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக - தேமுதிக உறவு கடந்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலில் உதயமானது. அப்போதிலிருந்து அதிமுக கூட்டணியில் இடம்பெற்று வந்த தேமுதிக பேரவைத் தேர்தலிலும் அங்கம் வகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருந்தபோதிலும், தேமுதிக தலைவர்களின் பேச்சு கூட்டணி முரண்பாடுகளை அவ்வப்போது வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்குவதில் அதிமுக தாமதிப்பதாக தேமுதிக வெளிப்படையாகவே விமரிசித்தது.
கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகும் தொகுதி எண்ணிக்கைகளில் இருகட்சிகளுக்கிடையே உடன்பாடு ஏற்படவில்லை. ஒருபுறம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றாலும், மறுபுறம் விஜயகாந்த் தான் நமது முதல்வர் என்றும் முரசுதான் நமது சின்னம் என்றும் கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், தேமுதிகவுடன் கூட்டணி குறித்து அதிமுக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியது.
இப்படியாக விஜயகாந்த் பிறந்த நாள் தொடங்கி இன்று வரை தேர்தல் குறித்தும் கூட்டணி குறித்தும் தேமுதிக செய்த சாகசங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 25, 2020 - பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்:
சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்கள் உள்பட எல்லோரின் விருப்பமாக உள்ளது.
ஆகஸ்ட் 31, 2020 - பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்:
முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற மிகப்பெரிய ஆளுமை இல்லாமல் வரும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், இதில் எந்தக் கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது.
நவம்பர் 6, 2020 - பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்:
அதிமுக ஆட்சியில் நிறையும், குறையும் கலந்திருக்கிறது. தேமுதிக அமைக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்.
நவம்பர் 9, 2020 - பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்:
தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து பொதுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
டிசம்பர் 10, 2020 - பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்:
தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து ஜனவரி மாதம் வெளியாகும்.
டிசம்பர் 13, 2020 - பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்:
தேமுதிக கூட்டணி குறித்து அடுத்த மாதம் (ஜனவரி 2021) முடிவு எடுக்கப்படும் - மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு பேட்டி.
டிசம்பர் 25, 2020 - பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்:
தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சி அமைக்கும். அதிமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு தேமுதிகவுக்கு இதுவரை அழைப்பு இல்லை.
ஜனவரி 11, 2021 - பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்:
அதிமுக கூட்டணியில்தான் தற்போது வரை நீடித்து வருகிறோம், எங்களுக்குத் தேவையான தொகுதிகளை நிச்சயம் அதிமுகவிடம் கேட்போம்.
ஜனவரி 13, 2021 - விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்:
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை - தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேச்சு
ஜனவரி 17, 2021 - துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ்:
அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதால் தேமுதிகவிற்கு நெருடல் இல்லை.
ஜனவரி 24, 2021 - பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்:
பெண் என்ற முறையில் சசிகலா அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். அவர் தனது பணியை அதிமுகவில் தொடர வேண்டும்.
ஜனவரி 24, 2021 - பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்:
தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும்.
ஜனவரி 27, 2021 - பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்:
பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணிப் பேச்சுவார்த்தையை அதிமுக துரிதப்படுத்த வேண்டும்.
ஜனவரி 27, 2021 - பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்:
எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல. அவர், அதிமுக கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டவர்.
ஜனவரி 28, 2021 - துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ்:
தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் யாருடன் கூட்டணி என்பது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.
ஜனவரி 30, 2021 - பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்:
அதிமுக கூட்டணியில் உரிய மதிப்புக் கிடைக்காவிட்டால், தனித்துப் போட்டியிடவும் தயாராக இருக்க வேண்டும் - நிர்வாகிகள் மத்தியில் பேச்சு.
ஜனவரி 31, 2021 - பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்:
தேர்தலுக்கு குறைவான நாள்களே இருப்பதால், கூட்டணிப் பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும்.
பிப்ரவரி 3, 2021 - விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்:
மூன்றாவது அணி அமைக்க தேமுதிக எப்போதும் தயாராக உள்ளது.
பிப்ரவரி 4, 2021 - பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்:
தேமுதிக இடம்பெறும் கூட்டணிதான் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
பிப்ரவரி 7, 2021 - பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்:
தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை 'கூட்டணி'.
பிப்ரவரி 8, 2021 - பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்:
தேமுதிக தனித்து நின்றாலும் 10 முதல் 15 சதவிகித வாக்குகளைப் பெறும்.
பிப்ரவரி 13, 2021 - பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்:
தேமுதிக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறும் அளவுக்கு வலிமையுடன் உள்ளது.
பிப்ரவரி 18, 2021 - பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்:
ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் சரிசமமாக மல்லுக்கட்டி நிற்கும் ஒரே கட்சி தேமுதிகதான். தேமுதிகவுக்கு 10 சதவிகிதத்துக்கும் குறையாமல் வாக்கு வங்கி இருந்து வருகிறது.
பிப்ரவரி 21, 2021 - துணைப் பொதுச்செயலர் பார்த்தசாரதி:
அதிமுக அணியில் தேமுதிக 41 தொகுதிகளைக் கேட்கும்.
பிப்ரவரி 27, 2021:
பாமகவுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேமுதிக தலைவர் விஜயகாந்தைச் சந்தித்து அதிமுக தலைவர் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினர்.
பிப்ரவரி 28, 2021 - பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்:
தேமுதிக 234 தொகுதிகளிலும் தனித்து களம் கண்ட கட்சி. இருப்பினும், தேர்தலை எதிர்கொள்ள பொருளாதார ரீதியாக பின்தங்கியிருப்பதால் கூட்டணியை நாட வேண்டியுள்ளது.
மார்ச் 1, 2021:
அதிமுக - தேமுதிக இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மார்ச் 1, 2021 - துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ்:
நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு என்பதைக் குறிக்கும் வகையில் பேஸ்புக் பதிவு.
மார்ச் 3, 2021 - துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் பேச்சு:
கூட்டணிக்காக தேமுதிக கெஞ்சவில்லை, அதிமுகதான் கெஞ்சுகிறது.
மார்ச் 5, 2021 - தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி:
அதிமுகவிடம் 25 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்.
மார்ச் 6, 2021 - துணைச் செயலாளர் பார்த்தசாரதி:
தொகுதிகள் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டோம். ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க உறுதியளித்துள்ளார்கள்.
மார்ச் 8, 2021:
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
மார்ச் 9, 2021 (இன்று):
அதிமுக - பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்தார்.
மார்ச் 9, 2021 (இன்று) - துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ்:
அதிமுக கூட்டணியிலிருந்து விலகியிருக்கும் இந்த நாள் தேமுதிக தொண்டர்களைப் பொறுத்தவரை தீபாவளி. அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும்.
மார்ச் 9, 2021 - விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்:
எடப்பாடி தொகுதியில் அதிமுக மண்ணைக் கவ்வும்.
இப்படியாக பேரவைத் தேர்தல் பயணத்தை மேற்கொண்டு வரும் தேமுதிக அடுத்தகட்டமாக அமமுகவுடன் கூட்டணி வைக்கிறதா, மூன்றாவது அணி என கருதி வரும் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைக்குமா அல்லது தேமுதிக தலைமையில் கூட்டணியை உருவாக்க முயற்சிக்குமா என்பதற்கான பதில் வெகு தொலைவில் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.