
நாகப்பட்டினம்: நாகையை அடுத்த நாகூரில் வீட்டின் மேற்கூரை மற்றும் சுவர் இடிந்து விழுந்ததில் இடர்பாடுகளில் சிக்கிய ஒரு பெண் உயிரிழந்தார். காயமடைந்த 2 பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நாகூர் செய்யது பள்ளித்தெரு முதல் சந்து பகுதியைச் சேர்ந்த ஹூசைன். இவரது மனைவி ஜெகபர் நாச்சியார் (70). இவர் தனக்கு சொந்தமான பழயை ஓட்டு வீட்டில் மகள் ரெஜினா பானு (43),உறவினரான அ.ஜெகபர் நாச்சியார்(65) ஆகியோருடன் வசித்து வந்தார்.
கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால் இந்த வீடு பலமிழந்திருந்தாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | கரோனா: தமிழ்நாட்டில் நவ.30 வரை என்னென்ன கட்டுப்பாடுகள்?
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 3 பேரும் வீட்டின் சமையலறையில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது வீட்டின் மேல்கூரை மற்றும் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேரும் இடர்பாடுகளில் சிக்கினர்.
இது குறித்து தகவலறிந்த நாகை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று இடர்பாடுகளில் சிக்கியிருந்த 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க | சொந்த தொகுதியில் களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்
தொடர்ந்து, மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்ததில் ரெஜினாபானு ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இடர்பாடுகளில் சிக்கி படுகாயமடைந்த மற்ற 2 பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இது குறித்து, தகவலறிந்த நாகை மாவட்ட ஆட்சியர் அ. அருண்தம்புராஜ் நாகை மருத்துவமனைக்குச் சென்று சுவர் இடிந்து விழுந்து பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டு, அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.