நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு இரக்கம் காட்டுவது சந்தேகம்: அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு அச்சத்தால் 10 மாணவர்கள் உயிரிழந்ததற்கு மத்திய அரசு இரக்கம் காட்டும் என்பது சந்தேகம்தான் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.


வேலூர்: போராட்டத்தில் ஈடுபட்டு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்த நிலையிலும் இரக்கம் காட்டாத மத்திய அரசு, நீட் தேர்வு அச்சத்தால் 10 மாணவர்கள் உயிரிழந்ததற்கு இரக்கம் காட்டும் என்பது சந்தேகம்தான் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி திருநாவுக்கரசு-ருக்மணி தம்பதியின் நான்காவது மகள் செளந்தர்யா (17). தோட்டப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்றிருந்த இவர், ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற நீட் மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதினார்.
தேர்வு கடினமாக இருந்ததாகவும், தன்னால் தேர்ச்சி பெற்று மருத்துவராக முடியாதோ என்ற கவலையில் இருந்த சௌந்தர்யா, புதன்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஏற்கனவே, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி ஆகியோர் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்திருந்த நிலையில், 3 ஆவது நிகழ்வாக காட்பாடி பகுதியைச் சேர்ந்த மாணவி செளந்தர்யா தற்கொலை செய்துள்ளார்.
இந்நிலையில், மாணவி சௌந்தர்யாவின் இல்லத்துக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மக்களவை உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), டி.எம்.கதிர்ஆனந்த் (வேலூர்), சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் வியாழக்கிழமை நேரில் சென்று மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியது:
நீட் தேர்வு தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களை உயிரைக் குடித்துள்ளது. அதன் பசி எப்போது தீரும் எனத் தெரியவில்லை. பெற்றோர்களின் கண்ணீர் வீண் போகாது. நிச்சயமாக நீட் என்ற அரக்கனை ஒழித்து இந்த அரசு முற்றுப்புள்ளி வைக்கும்.
மக்களுக்கு ஒரு வேண்டுகோளாகக் கூறுகிறேன். பயத்தாலோ, தேர்வு முடிவு வந்த பிறகு ஏற்படும் தோல்வியாலோ மனம் உடைந்துவிடக் கூடாது. தேர்வில் தோல்வி அடைவதால் உலகம் மூழ்கி விடாது. தேர்வுக்குப் பின்னும் வாழ்க்கை உள்ளது. வீரமாக இதை எதிர்த்து நிற்போம். இத்தகைய உயிரிழப்புகளுக்கு பிறகும் மத்திய அரசு இரக்கம் காட்டுமா எனத் தெரியவில்லை. விவசாயிகள் போராட்டத்தில் நூறு பேர் உயிரிழந்தனர். அதையெல்லாம் பொருட்படுத்தாத மத்திய அரசு, இந்த 10 மாணவர்களுக்கு இரக்கம் காட்டும் என்பது சந்தேகம்தான் என்றார்.
இதையும் படிக்க | நீட் தோ்வு தற்கொலைகள்: மன நல ஆலோசனை மையம் தொடக்கம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...