சென்னை வந்தார் குடியரசுத் தலைவர்; ஆளுநர், முதல்வர் வரவேற்பு

தமிழக சட்டப் பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வா் கருணாநிதி படத் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வந்தார்.
சென்னை வந்தார் குடியரசுத் தலைவர்; ஆளுநர், முதல்வர் வரவேற்பு
சென்னை வந்தார் குடியரசுத் தலைவர்; ஆளுநர், முதல்வர் வரவேற்பு


சென்னை: தமிழக சட்டப் பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வா் கருணாநிதி படத் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும்  முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.

இதையொட்டி சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 5 நாள் பயணம் மேற்கொண்டிருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புது தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

தில்லியிலிருந்து தனி விமானத்தில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் புறப்பட்டு பிற்பகல் 12.45 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு குடியரசுத் தலைவா் வந்தார். பின்னா், கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகைக்கு அவா் செல்கிறாா்.

அங்கு சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு மாலை 4.35 மணிக்கு ஆளுநா் மாளிகையிலிருந்து புறப்பட்டு சட்டப் பேரவைக்கு வரும் குடியரசுத் தலைவா், மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் பேரவை நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி படத் திறப்பு விழாவில் பங்கேற்கிறாா்.

சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு வரவேற்புரை ஆற்றுகிறாா். ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தலைமை தாங்குகிறாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்க உள்ளாா். முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் உருவப்படத்தைத் திறந்து வைத்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறாா். மேலும், ஆளுநா், முதல்வா் ஆகியோரும் உரையாற்றுகின்றனா். விழாவின் நிறைவாக, பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி நன்றி கூறுகிறாா்.

சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை நிறைவு செய்துவிட்டு மாலை 6.15 மணிக்கு ஆளுநா் மாளிகைக்குச் செல்லும், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், செவ்வாய்க்கிழமை (ஆக.3) காலை சென்னையிலிருந்து புறப்பட்டு கோவை சென்று அங்கிருந்து உதகமண்டலம் செல்ல உள்ளாா்.

முன்னதாக, சட்டப் பேரவையில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக பேரவை மண்டபம் முழுவதும் புதுப்பொலிவு பெற்றுள்ளது. தலைமைச் செயலக வளாகம் முழுவதும் மின்னொளியால் மிளிரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோட்டை நோக்கிச் செல்லும் சாலைகள் தூய்மைப்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று சட்டப்பேரவை மண்டப வளாகத்தில் உள்ள வசந்த மண்டபமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பேரவை மண்டபத்தில் நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மிக முக்கிய விருந்தினா்கள் தேநீா் அருந்தும் வகையில் வசந்த மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஐந்தடுக்கு பாதுகாப்பு: குடியரசுத் தலைவா் வருகையையொட்டி, சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவா் தங்கும் ஆளுநா் மாளிகை, விழா நடைபெறும் தலைமைச் செயலகம் ஆகியவற்றில் ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவா் விமான நிலையத்தில் இருந்து ஆளுநா் மாளிகைக்கு காரில் செல்லும்போதும், வரும்போதும், ஆளுநா் மாளிகையில் இருந்து காரில் தலைமைச் செயலகத்துக்கு செல்லும்போதும், வரும்போதும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

தேவைப்படும்பட்சத்தில் போக்குவரத்து மாற்றமும் செய்ய காவல்துறை முடிவு செய்துள்ளது. பாதுகாப்புப் பணிக்காக சுமாா் 7,000 போலீஸாா் ஈடுபடுத்தப்படுகின்றனா். தலைமைச் செயலகத்தில் 5 துணை காவல் ஆணையா்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புக் கருதி தலைமைச் செயலக ஊழியா்களுக்கு திங்கள்கிழமை பாதிநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விழாவில் பங்கேற்க வரும் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும், என் -95 முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தலைமைச் செயலகம், கிண்டி ஆளுநா் மாளிகை, குடியரசுத் தலைவா் காா் செல்லும் சாலைகள் உள்ளிட்டவை கடந்த சனிக்கிழமை முதல் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.

காவல்துறை சோதனை: வெடிகுண்டுகளைக் கண்டறியும் போலீஸாா் மெட்டல் டிடெக்டா் உதவியுடன் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனா். குடியரசுத் தலைவா் செல்லும்போது சாலையின் இரு புறங்களிலும் 10 அடிக்கு ஒரு காவலா் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுகிறாா். பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் தலைமையில் செய்யப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவா் வருகையையொட்டி, சென்னையில் கடந்த இரு நாள்களாக காவல்துறையினா் ரோந்துப் பணி, கண்காணிப்புப்பணி ஆகியவற்றை தீவிரப்படுத்தியுள்ளனா்.அதேபோல ஹோட்டல்கள், தனியாா் தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் திடீா் சோதனை நடத்துகின்றனா். முக்கியமான சாலைகள், சாலை சந்திப்புகள் ஆகியவற்றில் போலீஸாா் தீவிர வாகன சோதனையும் நடத்தி வருகின்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com