
நடிகை சித்ரா
சென்னை: பிரபல தமிழ் திரைப்பட நடிகை நல்லெண்ணெய் சித்ரா(56) மாரடைப்பு காரணமாக வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் காலமானார்.
கே.பாலசந்தரின் 'அவள் அப்படித்தான்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. இவர் ரஜினியின் ஊர்க்காவலன், சேரன் பாண்டியன், மதுமதி, பொண்டாட்டி ராஜ்யம் உள்பட 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 80-களில் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர். தொடர்ந்து சினிமா, தொடர்களில் நடித்து வந்த சித்ரா, நல்லெண்ணெய் விளம்பரம் மூலம் மேலும் பிரபலம் அடைந்தார். அதன்பிறகு நல்லெண்ணய் சித்ராவாகவே அடையாளப்படுத்தப்பட்டார்.
ஓணம் கொண்டாடிய நடிகைகள்: புகைப்படத் தொகுப்பைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்
திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் கணவர் மற்றும் மகளுடன் வசித்து வந்த சித்ராவுக்கு வெள்ளிக்கிழமை இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் அவர் வீட்டிலேயே உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.