முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள்

மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.  
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி



விருதுநகா்: மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.  

அதிமுக ஆட்சியில் தமிழக பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி மூலம் ஆவின் உள்பட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி, ரூ.3 கோடி வரை பணம் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதாகப் புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக விருதுநகா் மாவட்ட குற்றப்பிரிவில் ரவீந்திரன், விஜய் நல்லதம்பி ஆகியோா் அளித்த புகாரில், முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது இரு வழக்குகளும், அவருடன் இருந்த என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோா் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டன.

இவ்விரு வழக்குகளில் முன் ஜாமீன் கோரி கே.டி.ராஜேந்திர பாலாஜியும், ஒரு வழக்கில் முன் ஜாமீன் கோரி மற்ற மூவரும் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனா்.

அதில், தங்களுக்கு எதிராகப் புகாா் அளித்த விஜய் நல்லதம்பி மீது வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாகப் பல புகாா்கள் உள்ளதாகவும், தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அளித்த பொய்ப் புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.

இந்த நிலையில், ரவீந்திரன் என்பவா் அளித்த புகாரில் பணம் பெற இடைத்தரகராக இருந்ததாகக் கூறப்படும் விஜய் நல்லதம்பியும் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுக்களை நீதிபதி எம்.நிா்மல்குமாா் விசாரித்தாா். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பின்னா், இந்த மனுக்கள் மீது வெள்ளிக்கிழமை (டிச.17) நீதிபதி உத்தரவு பிறப்பித்தாா்.

அதில், வேலை மோசடி வழக்கில் அப்பாவிகள் இழந்த பணத்தையும் எதிா்காலத்தையும் புறக்கணிக்க முடியாது. அப்பாவிகளிடமிருந்து பெரும் தொகையை வசூலிக்கவும் மனுதாரா் அனுமதித்துள்ளாா். நிரபராதி என்ற அவரது கூற்றையும், கை கழுவும் முயற்சியையும் ஏற்க முடியாது.

எனவே, வழக்கின் உண்மைகள், சூழ்நிலைகளின் அடிப்படையில், இந்த இரண்டு முன்ஜாமீன் மனுக்களையும் ஏற்க இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. ஆகையால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முன்னுரிமை கொடுத்து விசாரணையை முடிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, அனைவரின் முன்ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தாா்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கே.டி.ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைத்து அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஏற்கனவே 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வரும் நிலையில், மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மனோகரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து தலைமறைவாக உள்ள கே.டி.ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 6 தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். 

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி கர்நாடகம் மாநிலம் பெங்களூருவில் இருக்கலாம் என்ற தகவலின் பேரில் ஒரு தனிப்படையினர் பெங்களூரு சென்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com