பருவமழை சேதங்கள்: சாலைகள், வடிகால்களை சீரமைக்க ரூ.300 கோடி

வடகிழக்கு பருவ மழையால் சேதமடைந்த வடிகால்கள், சாலைகளை சீரமைக்க ரூ.300 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

வடகிழக்கு பருவ மழையால் சேதமடைந்த வடிகால்கள், சாலைகளை சீரமைக்க ரூ.300 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    
மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வடகிழக்குப் பருவமழையினால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கன்னியாகுமரியிலும் மிக அதிகளவில் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நேரில் சென்று தொடர்ந்து ஆய்வு செய்து நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலைகள், வடிகால்கள் மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகளை சீரமைப்பதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், அவற்றிற்காக ரூ.300 கோடி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க குழு அமைக்கப்பட்டது.

இந்தக் கூழு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு நீரில் மூழ்கிய பயிர்களைப் பார்வையிட்டு, பயிர் பாதிப்பு நிலவரம் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு, பின்னர் விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர். இந்த அறிக்கையை முதல்வரிடமும் அவர்கள் சமர்ப்பித்தனர். அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு இழப்பீடும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • அதாவது, அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை- கார்- சொர்ணவாரிப் பயிர்கள், முழுமையாக சேதமடைந்த இனங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடாக, ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து, நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை மறு சாகுபடி செய்திட ஏதுவாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 6 ஆயிரத்து 38 ரூபாய் மதிப்பீட்டில் இடுபொருள்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com