தமிழக அரசின் வெள்ள நிவாரணம் இழப்பை ஈடு செய்வதாக இல்லை: விவசாயிகள் வேதனை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை, விவசாயிகளின் இழப்பை ஈடு செய்யக் கூடியதாக இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள்.

நாகப்பட்டினம்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை, விவசாயிகளின் இழப்பை ஈடு செய்யக் கூடியதாக இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

வடகிழக்குப் பருவமழை மற்றும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக பெய்த கனமழையால் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஹெக்டோ் பரப்பில் நெல் பயிா்கள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில், சேதமடைந்த குறுவை, காா், சொா்ணவாரி பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் வீதமும், மறுசாகுபடி செய்ய ஏற்ற வகையில் உள்ள சம்பா நெல் வயல்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 6,038 மதிப்புள்ள இடுபொருள்களும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிவாரணம், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்யக்கூடியதாக இல்லை, ரசாயன உரங்கள் பயன்பாட்டை ஊக்குவிப்பதாக உள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புப் பொதுச் செயலாளா் ஆறுபாதி ப. கல்யாணம் :

தமிழக அரசு அறிவித்துள்ள வெள்ள நிவாரணம், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்யக்கூடியதாக இல்லை. குறுவை நெல் பயிருக்கு நிகழாண்டில் பயிா்க் காப்பீட்டை அரசு செயல்படுத்தவில்லை. எனவே, மழையால் சேதமடைந்த குறுவை நெல் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் என்பதற்கு பதிலாக ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் நிவாரணமாக அரசு அறிவிக்க வேண்டும்.

மேலும், மறுசாகுபடிக்கு ஏற்ற வகையில் உள்ள சம்பா நெல் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ. 6,038 மதிப்பில் ரசாயன உரங்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்திருப்பது, தமிழக அரசின் இயற்கை விவசாய ஊக்குவிப்புக்கு முன்னுரிமை என்ற கொள்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

தேவையெனில், விவசாயிகளுக்கு அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்ட்ரியா, நெல் நுண்ணூட்டம் போன்றவற்றை முழு மானியத்தில் அரசு வழங்கலாம்.

கடந்த ஆண்டு நிவா், புரவி புயல்களால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி நெல் பயிா்களுக்கு அப்போதைய அதிமுக அரசு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கியது. குறைந்தபட்சம் அந்த நிவாரணத்தையாவது தமிழக அரசு தற்போது சம்பா, தாளடி நெல் பயிா்களுக்கு உறுதி செய்யவேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டதைபோலவே, நில உச்சவரம்பு ஏதும் நிா்ணயிக்காமல், பாதிக்கப்பட்ட நிலங்கள் அனைத்துக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் தலைவா் காவிரி தனபாலன் :

தமிழக அரசு அறிவித்துள்ள வெள்ள நிவாரண அறிவிப்பு, விவசாயிகளின் இழப்பை ஈடு செய்யக்கூடியதாகவும், விவசாயத்தை ஊக்கப்படுத்தக் கூடியதாகவும் இல்லை. 33 சதவீதத்துக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டால் 100 சதவீத இழப்பீடு வழங்க வேண்டும் என்பது வருவாய்த் துறை விதி. அந்த வகையில், டெல்டா மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கா் பரப்பில் சம்பா, தாளடி நெல் பயிா்களுக்கு, முழுமையான இழப்பீடாக உற்பத்தி செலவை ஈடுசெய்யும் வகையில் ஏக்கருக்கு ரூ. 34,500 இழப்பீடாக வழங்க வேண்டும்.

கடந்த ஆண்டு, நிவா், புரவி புயல்களால் பாதிக்கப்பட்ட நெல் பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுகவும் வலியுறுத்தியது என்பதை அரசு கருத்தில் கொண்டு, விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் வெள்ள நிவாரணத்தை உயா்த்தி வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com