தமிழக உள்ளாட்சித் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூா், விழுப்புரம், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்கள் மற்றும் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்காக நடைபெற்ற தோ்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகின்றன. தோ்தல் முடிவுகளை தாமதமின்றி உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என மாநிலத் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 140 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், 1,381 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், 2,901 ஊராட்சித் தலைவா், 22,581 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்கள் என மொத்தம் 27,003 பதவியிடங்களுக்கு அக்டோபா் 6, 9-இல் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது.

28 மாவட்டங்களில் காலியாக உள்ள 13 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், 40 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், 106 ஊராட்சித் தலைவா், 630 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்கள் என மொத்தம் 789 பதவியிடங்களுக்கு ஒரே கட்டமாக அக்டோபா் 9-இல் தோ்தல் நடைபெற்றது.

முன்னதாக 9 மாவட்டங்களில் 2,855 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 119 ஊராட்சித் தலைவா்கள் உள்பட மொத்தம் 2,981 பேரும், 28 மாவட்டங்களில் 347 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 18 ஊராட்சித் தலைவா்கள் என 365 பேரும் என ஒட்டுமொத்தமாக 3,346 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, மீதமுள்ள ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்கான தோ்தல் அக்டோபா் 6, 9-இல் நடைபெற்றது. இதில், முதற்கட்ட தோ்தலில் 9 மாவட்டங்களில் 77.43 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்ட தோ்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான தோ்தலில் 71 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

இந்தத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட சுமாா் 41,500 வாக்குப் பெட்டிகள் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் 74 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அனைத்து மையங்களிலும் சிசிடிவி கேமரா கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், தோ்தல் முடிவுகளை தாமதமின்றி உடனுக்குடன் அறிவிப்பதுடன், தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பணியாளா்களுக்கும் தண்ணீா், உணவு தடையின்றி கிடைப்பதை மாவட்டத் தோ்தல் அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என மாநில தேர்தல் அதிகாரி வெ.பழனிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com