தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மீன்பிடித் துறைமுகங்கள், இறங்குதளங்களை திறந்து வைத்தார் முதல்வர்

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.43.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

News image
மீன்பிடித் துறைமுகங்கள், இறங்குதளங்களை திறந்து வைத்தார் முதல்வர்
Updated On :5 ஆகஸ்ட் 2022, 10:57 am

DIN


மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.43.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (5.8.2022) தலைமைச் செயலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.43.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மீன் இறங்குதளம், மீன்விதை வளர்ப்பு தொட்டிகள், வண்ணமீன் வளர்ப்பு கூடம் மற்றும் பயிற்சி மையம், மீன் உலர் தளம், அலுவலகக் கட்டடங்கள், பனிக்கட்டி உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட கட்டடங்களை திறந்து வைத்தார்.

மீன் வளத்தை பாதுகாத்தல், நிலையான மீன்பிடிப்பு மற்றும் மீன் வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்க செய்தல், மீன்பிடி படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன்பிடி இடத்திலிருந்து அதன் நுகர்வு வரை சுகாதாரமான முறையில் கையாளப்படுவதை உறுதி செய்வதற்கும் மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், கரையோர வசதிகள், மீன் சந்தைகள் போன்ற நவீன உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிகுப்பத்தில், ரூ.16.80 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளம் மற்றும் கடல் அரிப்பு தடுப்பு பணிகள்; 

தென்காசி மாவட்டம், கடனா அரசு மீன்விதை பண்ணையில் ரூ. 5 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மீன்வளர்ப்பு தொட்டிகள்; திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மணிமுத்தாறில் ரூ.2.50 கோடி செலவில் நவீனப்படுத்தப்பட்ட மீன்விதைப் பண்ணை;

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், பிளவக்கல்லில் ரூ.1.81 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட அரசு மீன்விதைப் பண்ணை; காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் மீன்விதைப் பண்ணை ரூ.2.85 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டதுடன், அப்பண்ணையில் புதிதாக கட்டப்பட்டுள்ள வண்ணமீன் வளர்ப்புக் கூடம் மற்றும் பயிற்சி மையம்;

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், மஞ்சளாறு கிப்ட் திலேப்பியா மீன்குஞ்சு பொரிப்பகத்தில் ரூ.81 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு சுவருடன் கூடிய மீன் வளர்ப்பு குளம்; தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், வைகை அணையில் ரூ.1.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மீன்விதை வளர்ப்பு தொட்டிகள்;

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், பழையார் மீன்பிடித்துறைமுகத்தில் ரூ.2.87 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள படகுகள் பழுது பார்க்கும் தளம் மற்றும் ரூ.1.17 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மீன் உலர் தளம்; மதுரை மாவட்டம், மதுரை பேச்சியம்மன் படித்துறையில் ரூ.1.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கான அலுவலகக் கட்டடம்;

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் ரூ. 78 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகக் கட்டடம்; தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் ரூ.1.50 கோடி செலவிலும், தருவைக்குளம் மீன் இறங்குதளத்தில் ரூ.1.75 கோடி செலவிலும், கன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் ரூ.1.50 கோடி செலவிலும், குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் ரூ.1.50 கோடி செலவிலும் கட்டப்பட்டுள்ள பனிக்கட்டி உற்பத்தி நிலையங்கள்; என மொத்தம் ரூ.43.50 கோடி செலவில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.