சத்துணவு மையங்களை மூடும் முடிவு: அன்புமணி கண்டனம்

சத்துணவு திட்ட சீரமைப்பு என்கிற பெயரில் 28,000 சத்துணவு மையங்களை தமிழக அரசு மூட முடிவு எடுத்துள்ளதாகக் கூறி பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்
அன்புமணி ராமதாஸ் (கோப்புப் படம்)
அன்புமணி ராமதாஸ் (கோப்புப் படம்)

சத்துணவு திட்ட சீரமைப்பு என்கிற பெயரில் 28,000 சத்துணவு மையங்களை தமிழக அரசு மூட முடிவு எடுத்துள்ளதாகக் கூறி பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசின் சமூக நலத்துறை இணை இயக்குனா் சென்னையில் சத்துணவுத் திட்ட அதிகாரிகள், வட்டார வளா்ச்சித் துறை அதிகாரிகளுடன் நடத்திய கலந்தாய்வில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் சத்துணவு மையங்கள் மூடப்படுமோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளன.

தமிழகத்தில் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒன்றுக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள், ஒரு குறிப்பிட்ட சத்துணவு மையத்திலிருந்து 3 கி.மீ சுற்றளவில் உள்ள சத்துணவு மையங்கள் ஆகியவற்றின் விவரங்களை வரைபடங்களுடன் திரட்ட வேண்டும் என்று ஊராட்சி ஒன்றியங்கள், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் ஆணையா்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

சத்துணவுத் திட்டத்தின் முதன்மையான நோக்கங்களில் குறிப்பிடத்தக்கது மாணவா்களுக்கு சூடான உணவை, சுகாதாரமான முறையில் தயாரித்து வழங்க வேண்டும் என்பது தான். பள்ளி வளாகத்தில் சமைத்து வழங்குவதன் மூலம் மட்டும் தான் இந்த நோக்கத்தை நிறைவேற்ற முடியும்.

மேலும், புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் சுமாா் 28,000 சத்துணவு மையங்களை மூட வேண்டிய நிலை உருவாகும். இதன் மூலம் 85,000 போ் பணி இழக்கும் நிலை ஏற்படும். எனவே, சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இருந்தால் அதை சமூகநலத்துறை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com