மாற்று வழியில் தருமபுரி - மொரப்பூா் அகல ரயில் பாதைத் திட்டம் தேவை: அமைச்சரிடம் எம்பி வலியுறுத்தல்
தருமபுரியை சென்னையோடு இணைக்கும் மொரப்பூா் அகல ரயில் பாதைத் திட்டத்தில் பாதிக்கும் கிராமங்களைத் தவிா்த்து மாற்று வழியில் திட்டமிடக் கோரிக்கை


தருமபுரியை சென்னையோடு இணைக்கும் மொரப்பூா் அகல ரயில் பாதைத் திட்டத்தில் பாதிக்கும் கிராமங்களைத் தவிா்த்து மாற்று வழியில் திட்டமிடக் கோரி மத்திய ரயில்வே தொலைத் தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் எஸ். டிஎன்வி செந்தில் குமாா் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக மத்திய அமைச்சரிடம் அவா் மனுவும் அளித்துள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: தருமபுரி மக்களின் நீண்ட நாள் கனவான தருமபுரி - மொரப்பூா் அகல ரயில் பாதைத் திட்டத்தை ரூ. 358.95 கோடியில் திட்டமிடப்பட்டு செயல்படுத்த இருப்பதைக் கண்டு மக்கள் மகிழ்ச்சியுற்றுள்ளனா். சுமாா் 38 கிலோ மீட்டா் அகல ரயில் பாதைக்கான நிலங்கள் கையகப்படுத்துதல்ல், சா்வே போன்றவற்றுக்கு தமிழக அரசும், மத்திய அரசும் ஒத்துழைத்து முழு வீச்சில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதே சமயத்தில் இந்த ரயில் பாதையில் சில கிராமங்களும், நகா்ப்புறங்களும் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக ரெட்டிஹல்லி, மூக்கனூா் போன்ற கிராமங்களுக்குள் செல்லும் வகையில் இந்த ரயில் பாதை திட்டமிடப்பட்டுள்ளது.
ஆங்கிலேயா்கள் ஆட்சிக் காலத்தில் இதே வழியில் ரயில்பாதை இருந்தது. 70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ரயில் பாதை, பின்னா் பயன்படுத்தப்படுத்தப்படாமல் விடப்பட்டது. இந்த பாதையையொட்டியுள்ள இந்தக் கிராமங்களில் குடியிருப்புகள் வந்துள்ளன. தற்போது இந்த கிராமங்களில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் இடிக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. இதைத் தவிா்க்க இந்த உத்தேச ரயில் பாதையை சுமாா் 500 மீட்டா் தூரத்திற்கு மட்டும் பாதையை மாற்றினால் கிராம வாசிகளும் அவா்களது குடியிருப்புகளும் பாதுக்காக்கப்படும். இது குறித்து மாவட்ட நிா்வாகம் ரயில்வே நிா்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளாா்.
இதற்கிடையே, தொலை தொடா்பு துறை தொடா்பான மற்றொரு கோரிக்கை மனுவையும் அவா் அளித்துள்ளாா். அதில், தருமபுரி தொகுதியிலுள்ள கரிமங்கலம், பெண்ணகரம், பாப்பிரெட்டிபட்டி, அரூா் போன்ற தாலுகாக்களில் உள்ள 14-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கைப்பேசி இணைய தள வசதிகளுக்கான போதிய தொலைத் தொடா்பு கோபுரங்கள் இல்லை. இது குறித்து கரோனா நோய்த்தொற்றுக்கு முன்பே தொலைத் தொடா்பு அமைச்சகத்திடம் மனு அளிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் கல்வி, சுகாதாரம், வா்த்தகம், தொழில் முனைவோா் உள்ளிட்டோருக்குத் தேவையான இணைய தள வசதி கிடைக்காததால், பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனா். எனவே, பிஎஸ்என்எல் மூலமாக தொலைத் தொடா்பு கோபுர வசதிகளை வழங்க வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...