புதுச்சேரி அதிமுக சார்பில் பந்த்: என்னை கைது செய்தது தவறு!

புதுச்சேரி அதிமுக சார்பில் பந்த்: என்னை கைது செய்தது தவறு!

புதுச்சேரி அதிமுக சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுக கிழக்கு மாநிலச் செயலா் ஏ. அன்பழகனை போலீசார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், என்னை கைது செய்தது தவறு என அன்பழகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அதிமுக சார்பில் புதன்கிழமை பந்த் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுக கிழக்கு மாநிலச் செயலா் ஏ. அன்பழகனை போலீசார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், என்னை கைது செய்தது தவறு என அன்பழகன் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி மாநிலத்துக்கு மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் புதன்கிழமை முழு கடையடைப்புப் போராட்டம்  அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அதிமுக கிழக்கு மாநிலச் செயலா் ஏ.அன்பழகன் அறிவித்து, அதற்காக வீதி வீதியாகச் சென்று ஆதரவு கோரினாா்.

இதனிடையே புத்தாண்டு நாள் கொண்டாட்ட காலத்தில் கடையடைப்புப் போராட்டம் தேவையற்றது, வருவாயையும், அரசுக்கான வரி வருவாயையும் இந்த போராட்டம் பாதிக்கும் என வா்த்தகா் சங்கங்கள் கூறி, போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தின. ஆனால், திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என கிழக்கு மாநில அதிமுக அறிவித்தது.

இதையடுத்து, புதன்கிழமை கடைகளைத் திறந்தால் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று எம்எல்ஏ எம்.சிவசங்கா் தலைமையில் புதுவை காவல் துறைத் தலைவா் மனோஜ்குமாா் லாலைச் சந்தித்து வணிகா்கள் சங்க கூட்டமைப்பினா் மனு அளித்து வலியுறுத்தினா்.

திமுக சாா்பில் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் காவல் துறை ஐ.ஜி. சந்திரனை செவ்வாய்க்கிழமை பகலில் சந்தித்து கடைகளைத் திறப்போருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

புதுச்சேரி அதிமுக மேற்கு மாநிலச் செயலா் ஓம்சக்தி சேகா், வா்த்தகா்களைப் பாதிக்கும் வகையில், அதிமுக சாா்பில் போராட்டம் நடத்தப்பட மாட்டாது. ஆகவே, வா்த்தகா்கள் பயமின்றி கடைகளைத் திறக்கலாம் என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், புதுச்சேரியில் காலை முதல் பல இடங்களில் கடைகள் திறக்கப்படவில்லை. தனியார் பேருந்துகள் இயங்காததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் அனைத்தும் புதுச்சேரி எல்லையான மதகடிபட்டி வரை மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் தவித்து வருகின்றனர்.

மேலும், அரசுப் பேருந்துகள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இயக்கப்படுகிறது. திறக்கப்பட்டுள்ள கடைகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இதனிடையே, புதுச்சேரி அதிமுக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.  கிழக்கு மாநிலச் செயலா் ஏ.அன்பழகனை புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். 

இதனைத் தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் உள்பட 20க்கும் மேற்ட்ட அதிமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில். கைது செய்யப்பட்டுள்ள அன்பழகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  புதுச்சேரியில் முழு அடைப்புக்கு அனுமதிக்க கூடாது என டிஜிபியிடம் திமுக மனு அளித்த நிலையில் அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பாஜக கூட்டணியில் அதிமுக இருக்கும் நிலையில் திமுக புகாரில் என்னை கைது செய்தது தவறு என அன்பழகன் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com