திமுக அரசு தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக அரசு அதிமுகவினர் மீது தொடர்ந்து பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 
எடப்பாடி நெடுஞ்சாலைத்துறை சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி.
எடப்பாடி நெடுஞ்சாலைத்துறை சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி.
Published on
Updated on
1 min read


எடப்பாடி: திமுக அரசு அதிமுகவினர் மீது தொடர்ந்து பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், எடப்பாடி நெடுஞ்சாலைத்துறை சுற்றுலா மாளிகையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறியதாவது: 
தமிழகத்தில் தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்து வரும் திமுக அரசு, பொறுப்பேற்ற நாளிலிருந்து அதிமுகவின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை பழிவாங்கும் நோக்கிலேயே செயல்பட்டு வருகிறது. 

தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளிக்க கோரிக்கைகளை நிறைவேற்ற தவறியதையும் அண்மையில் திமுக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் நடைபெற்று வரும் ஊழல்களை மறைக்க விதமாக இந்த பழிவாங்கும் நடவடிக்கையை அரசு கையாண்டு வருகிறது. 

குறிப்பாக அண்மையில் நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதாக திமுக அரசு அறிவித்திருந்தது. பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு அறிவித்த அனைத்து பொருள்களும் சென்றடையவில்லை. அதேபோல நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெற்ற பொருள்களின் அளவு குறைந்தும், தரமற்றதாகவும் விநியோகிக்கப்பட்டது. 

பொங்கல் பரிசு வழங்கபடும் கரும்பிற்கு ரூ.33 விலை நிர்ணயம் செய்து அரசு அறிவித்த போதும் விவசாயிகளுக்கு ரூ.16 மட்டுமே கிடைத்தது என பல விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். 

சுமார் ரூ.1,300 கோடி மதிப்பில் பொங்கல் தொகுப்பில் இடம்பெற்ற பொருள்கள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கப்பட்டு இருந்த போதும் சுமார் ரூ.500 கோடி மதிப்பில் மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. 

இதுபோன்ற பெரியதொரு ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பும் நோக்கில் திமுக அரசு அதிமுகவைச் சார்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதன் நிர்வாகிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. 

அதேபோல் தற்போது அதிகரித்து வரும் கரோனா நோய்த்தொற்றினைக் கட்டுப்படுத்த நிர்வாக திறமையற்ற திமுக அரசு தவறிவிட்டது. குறிப்பாக மக்களிடத்தே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த தவறிய இந்த அரசு அதனை மூடி மறைக்கும் வகையிலும், மக்களை திசை திருப்பும் நோக்கிலும் அதிமுக நிர்வாகிகள் மீதும் தொண்டர்கள் மீதும் பொய் வழக்கு போட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இன்று முன்னாள் அமைச்சர் அன்பழகன் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. 

தொடர்ந்து அவதூறு செய்தியை பரப்பி மக்களை திசை திருப்பும் திமுகவின் அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என பழனிசாமி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com