இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

செம்மொழிச்சாலை, செம்மொழித் தமிழ் இருக்கைகள்: முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்

கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழறிஞர்களுக்கு வழங்கி உரையாற்றினார்.

News image
செம்மொழிச்சாலை, செம்மொழித் தமிழ் இருக்கைகள்: முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்
Updated On :22 ஜனவரி 2022, 12:16 pm

DIN

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைந்துள்ள மேடவாக்கம் – சோழிங்கநல்லூர் இணைப்புச்சாலை இனி செம்மொழிச்சாலை என அழைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும், செம்மொழிச் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் முதற்கட்டமாகத் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் ‘செம்மொழித் தமிழ் இருக்கைகள்’ அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பினையும் வெளியிட்டார்.

2010 முதல் 2019-ஆம் ஆண்டுகள் வரையிலான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழறிஞர்களுக்கு வழங்கி ஆற்றிய உரையில், 

தமிழ் தொன்மையான மொழி என்பதைத் தமிழர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியமில்லை. உலகம் முழுவதும் இருக்கும் மொழியியல் அறிஞர்கள், இனவியல் அறிஞர்கள் அதைத்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாபெரும் உண்மை இது.

தமிழ் - குறிப்பிட்ட நாட்டு மக்கள் பேசும் மொழியாக மட்டுமல்ல, ஒரு பண்பாட்டின் அடையாளமாக இருக்கிறது நம்முடைய தமிழ் மொழியானது. நிலத்துக்கு, மண்ணுக்கு, இயற்கைக்கு, மக்களுக்கு, பண்பாட்டுக்கு இலக்கணத்தை வகுத்திருக்கக்கூடிய மொழி!

தமிழ், உலகின் மூத்த மொழிகளில் ஒன்று! தமிழ், எந்த மொழியில் இருந்தும் கடன் வாங்கி உருவான கிளை மொழி அல்ல. தமிழில் இருந்துதான் ஏராளமான மொழிகள் உருவாகியுள்ளன. இப்படிப் பல மொழிகளை உருவாக்கும் திறன்கொண்ட மொழிதான், நமது தாய்மொழியான தமிழ். தமிழ், தமிழரசி, தமிழரசன் என்று மொழியின் பெயரையே பெயராக வைத்துக்கொள்ளும் அளவுக்கு பற்று நம் இனத்தில் இருக்கிறது. மொழிக்காக உயிரைத் தந்த தியாகிகளைப் பெற்ற மொழியும் நம் தமிழ்மொழி ஆகும்.

2004-ஆம் ஆண்டு அக்டோபர் 14-ஆம் நாள், மத்திய அரசால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழ்மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், அன்றைய மத்திய அரசால் 2007-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் நாள் தொடங்கி வைக்கப்பட்டது. செம்மொழி நிறுவனத்துக்கு எனத் தனியாக ஒரு கட்டடம் அமைய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆசைப்பட்டார்கள். அதற்காக 2007-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் நாள் சென்னை பெரும்பாக்கத்தில் 16 ஏக்கர் நிலத்தை வழங்கினார்கள். சுமார் 1 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பில் அந்த இடத்தை சமப்படுத்தி வழங்கினோம்.

அந்த இடத்தில் 24 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசு மாபெரும் கட்டடம் அமைத்துத் தந்துள்ளது. கடந்த 12-ஆம் தேதி அந்தக் கட்டடத்தை பிரதமர் மோடி  திறந்து வைத்திருக்கிறார்.

* செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 41 செவ்வியல் தமிழ் நூல்களின் ஆய்வுக்கு முதலிடம் வழங்கி வருகிறது.
* தொல் பழங்காலம் முதல் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதிக்குள் தோன்றிய இலக்கிய, இலக்கணம் குறித்த ஆய்வினை மேற்கொள்ள உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய இந்த நிறுவனம், தமிழ்மொழி ஆய்விலும் அதன் மேம்பாட்டிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறது.
* செம்மொழித் தமிழின் தொன்மையையும் தனித் தன்மையையும் அவற்றின் மரபுத் தொடர்ச்சியையும் ஆராய்ந்து பாதுகாப்பதை முக்கிய நோக்கமாக இந்நிறுவனம் கருதிக் கொண்டிருக்கிறது.

இந்த வரிசையில் செம்மொழித் தமிழாய்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறது.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு, 2008-ஆம் ஆண்டு ஜூலை 24-ஆம் நாள், தனது சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை கருணாநிதி வழங்கினார். ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை’ என்ற பெயரால் ஓர் அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளை சார்பில் தகுதிசால் தமிழறிஞர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்றும் விரும்பினார்.

இந்தியாவிலேயே மிக உயரிய விருதாக, பத்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகை கொண்டது இந்த விருது. பாராட்டு இதழும், கருணாநிதி உருவம் பொறித்த நினைவுப்பரிசும் வழங்கப்படுகிறது. தற்போது திமுக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 

தமிழின் வளர்ச்சிக்காக திமுக அரசு செய்திருப்பதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால்,

  • நமது மாநிலத்துக்கு மொழியின் பெயரால் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியது.
     
  • தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுவி, அதனை மாநிலப் பாடல் ஆக்கியது
     
  • உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளைப் பேரறிஞர் அண்ணா தலைமையில் தொடங்கி, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வரை நடத்தி, தமிழை உலகளவில் கொண்டு சென்றது.
     
  • வள்ளுவர் – ஔவையார் முதலான பழங்காலத் தமிழ்ப் புலவர்கள் தொடங்கி, கால்டுவெல் – ஜி.யு.போப் போன்ற அயல்நாட்டுத் தமிழறிஞர்கள் வரை, திருவுருவச்சிலை நிறுவியது
     
  • தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு சமூகநீதி வழியில் உயர்கல்வியில் இடஒதுக்கீடு தந்தது.
     
  • வள்ளுவருக்குச் சென்னையில் கோட்டமும் – குமரியில் 133 அடியில் வானுயர்ந்த சிலையும் நிறுவி உலகமே அண்ணாந்து பார்க்க வைத்தஆட்சி.
     
  • சுவடிகளில் இருந்து புத்தகங்களுக்குத் தமிழ் மாறியது போல், தமிழை இணையத்துக்குக் கொண்டு செல்ல 1999-லேயே தமிழ் இணைய மாநாடு நடத்தியதும், தமிழ் இணையக் கல்விக் கழகத்தை நிறுவி, இன்று உலகில் எங்கிருந்தாலும், தமிழ் இலக்கண – இலக்கியங்களை அனைவரும் படிக்கும் அளவிற்குத் தமிழை இணையப்படுத்தியது திமுக ஆட்சிதான் என்று ஸ்டாலின் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், 

* செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைந்துள்ள மேடவாக்கம் – சோழிங்கநல்லூர் இணைப்புச்சாலை இனி “செம்மொழிச்சாலை எனப் பெயர் மாற்றம் செய்யப்படும்.

* செம்மொழிச் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் முதற்கட்டமாகத் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் ‘செம்மொழித் தமிழ் இருக்கைகள்’ அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்களை செம்மொழி நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. செம்மொழி நிறுவனம் முன்வைத்துள்ள இலக்குகளை அடைய, தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும்.

’நோம்சாம்ஸ்கி’ போன்ற உலகப் புகழ்பெற்ற அறிஞர்கள், மொழியை மூளையின் ஓர் உறுப்பு என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். “குழந்தையின் மூளைக்குள் ஒரு மொழியறிவு இருக்கிறது, இது மனித இனத்துக்கே உரியது” என்று அவர் சொல்கிறார்.

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் என்று எப்போதோ சொல்லிவிட்டார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். உங்களது ஆய்வுகள் அறிவுப்பூர்வமானதாக மட்டுமில்லாமல் உணர்வுப்பூர்வமானதாகவும் அமைய வேண்டும். அப்படி அமைந்தால் உலக மொழியியல் அறிஞர்கள் அனைவரும் தேடி வரக்கூடிய இடமாகச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நிச்சயமாக மாறும். அப்படி உயர்ந்து நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் பேசினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.