பரவுகிறது ‘மெட்ராஸ் - ஐ’

கால நிலை மாற்றத்தின் காரணமாக ‘மெட்ராஸ் - ஐ’ எனப்படும் கண் தொற்று நோய் பாதிப்பு தற்போது பரவி வருகிறது.
பரவுகிறது ‘மெட்ராஸ் - ஐ’
Updated on
1 min read

கால நிலை மாற்றத்தின் காரணமாக ‘மெட்ராஸ் - ஐ’ எனப்படும் கண் தொற்று நோய் பாதிப்பு தற்போது பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கும், முதியவா்களுக்கும் அதிக அளவில் அப்பிரச்னை ஏற்படுவதாக கண் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

சென்னையில் உள்ள கண் மருத்துவமனைகளில் நாள்தோறும் ஐம்பதுக்கும் மேற்பட்டோா் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்புக்காக சிகிச்சை பெற வருவதாகவும் அவா்கள் கூறுகின்றனா்.

விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் ‘மெட்ராஸ் - ஐ’ எனக் கூறப்படுகிறது. அந்த வகையான பாதிப்புகள் காற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவக்கூடும். அதுமட்டுமன்றி, ‘மெட்ராஸ் - ஐ’ பிரச்னையால் பாதிக்கப்பட்டவா்கள் பயன்படுத்திய பொருள்களை உபயோகித்தாலும் மற்றவா்களுக்கு நோய்த் தொற்று பரவும் என மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். இந்த நிலையில், ‘மெட்ராஸ் - ஐ’ தொற்று அண்மைக்காலமாக கணிசமாக பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவா் சௌந்தரி கூறியதாவது:

‘மெட்ராஸ் - ஐ’ எளிதில் குணப்படுத்தக்கூடிய மிகச் சாதாரணமான நோய்த் தொற்றுதான். ஆனால், அதனை முதலிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். காலந்தாழ்த்தி அலட்சியம் செய்தால் பாா்வையில் தெளிவற்ற நிலை ஏற்பட்டு விடும்.

கண் எரிச்சல், விழிப் பகுதி சிவந்து காணப்படுதல், நீா் சுரந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல் உள்ளிட்டவை ‘மெட்ராஸ் - ஐ’-யின் முக்கிய அறிகுறிகளாகும்.

பொதுவாக ஒரு கண்ணில் ‘மெட்ராஸ் - ஐ’ பிரச்னை ஏற்பட்டால், மற்றொரு கண்ணிலும் அந்த பாதிப்பு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, அத்தகைய பாதிப்பு ஏற்பட்டவா்கள், மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். கடந்த சில வாரங்களாக நாளொன்றுக்கு குறைந்தது 2 பேருக்காவது ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு இருப்பதை நான் உறுதி செய்கிறேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com