
மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் வாகனத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி படத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கிழித்து எறிந்து, காலணியால் தாக்கினர். இதனால் சற்று நேரம் பரபப்பு நிலவியது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பின்பாக ஓபிஎஸ் - இபிஎஸ் என இரு பிரிவினராக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த ஓபிஎஸ்ஸுக்கு அதிமுகவின் ஒற்றைத்தலைமையே, பொதுச்செயலாளரே என்ற முழக்கத்தோடு வரவேற்றனர். அப்போது கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் தொண்டர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர்.
இதனையடுத்து தனது பிரசார வாகனத்தில் சென்ற ஓபிஎஸ் புறப்பட்டபோது, பிரசார வாகனத்தில் ஒட்டப்பட்டிருந்த இபிஎஸ் படத்தை பார்த்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களது காலணியால் இபிஎஸ் படத்தை தாக்கியதோடு இபிஎஸ்ஸுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது:
உயிரிலும் மேலான அதிமுக தொண்டர்கள் என் பக்கம் தான் உள்ளனர். தொண்டர்களோடு என்றும் இருப்பேன். தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலிப்பேன் என்றார்.
மேலும், அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழல், யாரால் சதிவலை பின்னப்பட்டது என்பது மக்களுக்கு தெரியும். அதற்கு மக்கள் தண்டனை தருவார்கள் எனவும், ஓபிஎஸ் போன்ற தொண்டரை பெற்றது பாக்கியம் என ஜெயலலிதா கூறினார்கள். அப்படிப்பட்ட என்னை யாராலும் அம்மாவின் இதயத்தில் இருந்து நீக்க இயலாது. என் எதிர்காலத்தை மக்களும் தொண்டர்களும் நிர்ணயிப்பார்கள் என்றார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.