சிறு-குறு தொழில் பாதுகாப்பு:
• பெரும்பாலான மூலப் பொருட்கள் பெரு நிறுவனங்களால் மட்டுமே உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் பஞ்சு, இரும்பு, தாமிரம், பிளாஸ்டிக் கிரானூல்ஸ் உள்ளிட்ட மூலப் பொருட்கள் ஒன்று முதல் இரண்டு மடங்கு விலைகள் கூடியுள்ளன. இதனால், சிறு-குறு நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களின் அடக்க விலை, அந்த பொருட்களை கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யும் காலத்திற்கும், உற்பத்தி செய்து வினியோகிக்கும் காலத்திற்கும் இடையே மூலப்பொருட்களின் விலையை விட அதிகமாவதால் பெரும் நட்டத்தை சந்தித்து வருகின்றன. இதை எதிர்கொள்வதற்கு அரசே இந்த மூலப்பொருட்களை கொள்முதல் செய்து சிறு குறு நிறுவனங்களுக்கு சலுகை விலையில் வழங்கிட வேண்டும்.
• தமிழக அரசு ஒரு ஆன்லைன் விற்பனை தளத்தை உருவாக்கலாம். அரசு நிறுவனங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்கள் கூட்டுறவு அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அரசுசார் அமைப்புகள் அனைத்தும் இந்த விற்பனை தளத்தின் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். இந்த விற்பனை தளம் சிறு-குறு தொழில்களின் உற்பத்தி பொருட்களை மட்டும் விற்பனை செய்வதற்கான தளமாகவும் அமைக்கப்பட வேண்டும். மேலும், இந்தியா முழுவதும் இதை சந்தைப்படுத்துவதற்கான முறையில் விளம்பரப்படுத்துவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இத்தகைய நிறுவனங்கள், தங்கள் தேவையில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் அளவிற்காவது சிறு குறு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வதை கட்டாயமாக்க வேண்டும்.